ராஜினாமாவா இல்லையா..டெல்லியில் முகாமிட்டிருக்கும் திமுக அமைச்சர்கள்

டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று காலை 11 மணிக்கு நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை கொடு்க்க இருந்த மத்திய திமுக அமைச்சர்களின் ராஜினாமா திட்டம் மாலை 6.30க்கு ஒத்தி வைக்கப்பட்டு, பின்னர் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து 6 அமைச்சர்களும் நாளை வரை தொடர்ந்து டெல்லியிலேயே தங்கியிருக்க திமுக உத்தரவிட்டுள்ளது.

தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளில், காங்கிரஸ் கட்சியின் போக்கைக் கண்டிக்கும் வகையில், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவது எனவும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு அளிப்பது எனவும் திமுக முடிவு செய்துள்ளது.

இதையடுத்து திமுக அமைச்சர்கள் எப்போது ராஜினாமா செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சனிக்கிழமையன்று திமுக தனது முடிவை அறிவித்த போதிலும் உடனடியாக யாரும் ராஜினாமா செய்யவில்லை. காங்கிரஸ் தரப்பிலிருந்து ஏதாவது தகவல் வருகிறதா என்று பார்த்து விட்டுச் செய்யலாம் என திமுக தலைமை நினைத்திருந்தது. ஆனால் நேற்று மாலை வரை காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒரு ஈ, காக்காவைக் கூட காணவில்லை.

இதையடுத்து இன்று திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு நேற்று தெரிவித்தார். அவர் இவ்வாறு அறிவித்த சில நேரத்தில் மத்திய அமைச்சர் பிரணாப் முகரிஜியிடமிருந்து பாலுவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ராஜினாமா முடிவை வாபஸ் பெறுமாறு பிரணாப் கூறினார்.

ஆனாலும் இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து விலகல் கடிதங்களை தரத் தயாராகுமாறு 6 திமுக மத்திய அமைச்சர்களுக்கும் திமுக தலைமை உத்தரவிட்டது.

இதையடுத்து அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் , பழனிமாணிக்கம், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், காந்தி செல்வன் ஆகிய 6 பேரும் இன்று காலை சென்னையிலிருந்து டெல்லி கிளம்பிச் சென்றனர்.

ஆனால், திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு பிரதமரை அவர்கள் சந்திக்கும் முடிவு திடீரென மாலைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கூட்டணியைக் காப்பாற்ற காங்கிரஸ், திமுக இரு தரப்பிலும் பிரணாப், அகமத் படேல், குலாம் நபி ஆசாத், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட தலைவர்கள் களத்தில் இறங்கியதையடுத்து ராஜினாமா கடிதம் திட்டம் மாலைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மாலை 6.30 மணிக்கு இவர்களை சந்திக்க பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கியிருந்தது. இந் நிலையில் முதல்வர் கருணாநிதியை பிரணாப் முகர்ஜி இருமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி நாளை வரை கால அவகாசம் பெற்றதையடுத்து, ராஜினாமா முடிவை நாளை வரை ஒத்தி வைக்க கருணாநிதி உத்தரவிட்டார். அதே நேரத்தில் தொடர்ந்து டெல்லியிலேயே தங்கியிருக்குமாறும் உத்தரவிட்டார்.

இதையடுத்து அமைச்சர்கள் டெல்லியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். ராஜினாமா செய்யச் சென்றதால் அவர்கள் இன்று தங்கள் அலுவலகங்களுக்குச் செல்லவில்லை. மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் டெல்லி இல்லத்திலேயே கூடியிருந்தனர்.

நாளை திமுக வேட்பாளர் நேர்காணல்:

இந் நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இந்த நேர் காணலில் மாவட்ட மற்றும் வட்ட செயலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

Source & Thanks : Thatstamil

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil