மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்; தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க புதிய முறை அமல்படுத்தப்படும்; பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார்.

கிராமப்புறங்களில் வேலை இல்லா திண்டாட்டத்தை போக்கி, கிராம மக்களுக்கு வருடத்தில் குறைந்த பட்சம் 100 நாட்கள் வேலை அளிக்கும் திட்டம் ஒன்றை மத்திய அரசு கடந்த 2006-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. Ôமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் என்ற சட்டத்தின் கீழ் இந்த வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதன் 5-ம் ஆண்டு விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நேற்று நடந்தது. விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:-

கிராமப்புற தொழிலாளர்களுக்கு கொண்டு வரப்பட்ட இந்த வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் ஏழ்மையற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் கனவு நனவாகி வருகிறது. இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டில் ஒரு நாளைக்கு 65 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது. இன்றைக்கு விலைவாசியை கருத்தில் கொண்டு இந்த சம்பளத்தை 100 ரூபாயக அதிகரித்துள்ளோம்.

இந்த திட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஏமாறப்படுகிறார்கள். அவர்களது வருகைப்பதிவேட்டில் முறைகேடுகள் நடக்கின்றன. சம்பளம் வழங்குவதில் ஊழல் நடக்கிறது என்று புகார்கள் வருகின்றன. அவற்றை தடுக்க, தொழிலாளர்களின் கைரேகைகளை பதிவு செய்து (பயோ மெட்ரிக் முறை) விவரங்கள் தயார் செய்யப்படும். இதன் மூலம் அனைத்து முறைகேடுகளும் தடுக்கப்படும்.

இந்த திட்டத்தில் இதுவரை 880 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தில் 52 சதவீத வேலைகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரால் செய்து முடிக்கப்பட்டு உள்ளது. 47 சதவீதம் வேலை பெண்களால் செய்யப்பட்டு உள்ளது. 10 ஆயிரம் வங்கிகள் மற்றும் தபால் நிலைய கணக்குகள் மூலம் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.

நக்சலைட்டுகள் நிறைந்த பகுதிகளில் இந்த வேலை திட்டத்தை நிறைவேற்றுவதில் சில சிக்கல்கள் உள்ளன. அங்கு ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி மற்றும் இளநிலை பொறியாளரை கொண்ட தொழில்நுட்ப குழு அமைத்து தடங்கல் இல்லாமல் இந்த வேலை நடைபெற அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு மன்மோகன்சிங் பேசினார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய ஆலோசனைக்குழு தலைவருமான சோனியா காந்தியும் விழாவில் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி சில மாநிலங்களில் வேறு திட்டங்களுக்கு செலவிடப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. தொழிலாளர்களின் வருகைப் பதிவேட்டில் மோசடி, போலியான தொழிலாளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு கூலி கொடுக்கப்படுவது போன்ற பல முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. தரமற்ற பொருள்களை வாங்கி வேலை செய்வதாகவும், தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.

மாநில அரசுகள் இந்த குறைகளை கவனத்தில் கொண்டு, அவற்றை தீர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குறைகளை களைந்து இந்த திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு சோனியா தெரிவித்தார்.

Source & Thanks : .maalaimalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil