சமச்சீர் கல்வித் திட்டம் எதிரான மனு தள்ளுபடி

தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ்நாட்டில் மத்திய வாரியம், மாநில வாரியம் வழிகள் மூலமான கல்வி மட்டுமன்றி, மெட்ரிகுலேஷன், ஏங்லோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் ஆகிய முறைகள் மூலமாகவும் கல்வி கற்பிக்கப்படுகிறது.

10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் அனைத்து கல்வி முறைகளும், மாநில வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றும் நிலையில், ஆரம்பக் கல்வியிலும் அதேபோன்ற நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழக அரசு சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்தியது.

முதல் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தை படிப்படியாக அனைத்து நிலைகளுக்கும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்த்து, தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் சார்பில், முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அதை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. அதே நேரத்தில், சமச்சீர் கல்வித் திட்டத்தில், அபராதம் தொடர்பான சில ஷரத்துக்களை மட்டும் நீக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

இந்த வழக்கு விசாரணைகள் நடைபெற்ற நேரத்தில், தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டம் பல முரண்பாடுகளைக் கொண்டிருப்பதாகக் கூறிய மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மாநில அரசின் சட்டத்தையும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின.

சமீபத்தில் இந்த விசாரணை நடைபெற்றபோது, நீதிபதிகள் சதாசிவம் மற்றும் செளஹான் ஆகியோர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச், மற்ற மாநிலங்களில் அமல்படுத்தப்படும் கல்வித் திட்டம் குறித்து ஆராய்ந்த பிறகே தமிழக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாகவும், அந்தத் திட்டம் சரியானதுதான் என்றும் நீதிபதிகள் தெரிவித்தார்கள்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, தமிழக அரசின் சார்பில், அட்வகேட் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ஆகியோர் ஆஜரானார்கள்.

அப்போது, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும், அது சிறப்பான தீர்ப்பு என்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பில் ஹரிஷ் சால்வே தெரிவித்தார். அதையடுத்து, அந்த வழக்கைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தார்கள்.

 

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil