இலங்கையில் பாண் விலை அதிகரிப்பு

இலங்கையில் பாண் எனப்படும் 450 கிராம் எடையுடைய பிரெட்டின் விலை வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மூன்று ரூபாய்களால் உயர்த்தப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜெயவர்தன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பேக்கரி உரிமையாளர்களுக்கு கோதுமை மாவில் அளிக்கப்பட்டு வந்த தள்ளுபடி குறைக்கப்பட்டதே இந்த விலையேற்றத்துக்கு முக்கிய காரணம் எனவும் என் கே ஜெயவர்தன கூறுகிறார்.

இலங்கையில் இதுவரை ஐம்பது கிலோ எடை கொண்ட கோதுமை மாவு மூட்டைக்கு அரசு 225 ரூபாய்கள் மானியம் வழங்கி வந்தது.

தற்போது அம்மானியம் மூட்டைக்கு 150 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பேக்கரி உரிமையாளர்கள் கோதுமை மாவுக்கு கூடுதலாக விலை கொடுக்க நேர்ந்துள்ளது எனவும் ஜெயவர்தன கூறுகிறார்.

மேலும் ஒரு பாணை 450 கிராமுக்கும் குறைவான எடையோடு தயாரிப்பவர்களின் பேக்கரிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

கோதுமை மாவுக்கு அளிக்கப்பட்டு வந்த அரசு மானியம் குறைக்கப்பட்டதை அடுத்து, பாணின் விலை மட்டுமல்லாமல் கோதுமை மாவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இதர பொருட்களின் விலையும் இலங்கையில் உயரும் என ஜெயவர்தன கூறுகிறார்.

சர்வதேச அளவில் கோதுமையின் விலை அதிகரித்துள்ளதாலேயே பேக்கரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிக்கிறார்.

நாடு முழுவதும் பாண் விற்பனையில் 50 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அனைத்து பேக்கரிகளிலும் தரமான பாண் உற்பத்தி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான என் கே ஜெயரட்ண தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil