இந்திய இலங்கை மீனவர்கள் சந்திக்கிறார்கள்

இந்திய இலங்கை மீனவர்கள் அடுத்த சில நாட்களில் சந்தித்து பேசவுள்ளனர். இருதரப்பினரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

நிரபராதி மீனவர்கள் கூட்டமைப்பின் சார்பில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது எனவும் இக்கூட்டம் ராமநாதபுரம் உட்பட தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் நடைபெறவுள்ளது எனவும் தமிழ் நாடு விசைப் படகு மீனவர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலர் போஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 25 மீனவப் பிரதிநிதிகள் இம்மாதம் 16 ஆம் தேதி ராமேஸ்வரம் வந்தடையவுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இருதரப்பு மீனவர்களுக்கும் இந்திய இலங்கை கடற்பரப்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது எனவும் போஸ் தெரிவிக்கிறார்.

தங்களுக்குள் கூட்டம் நடைபெற்ற பிறகு அதன் அடிப்படையில் இருநாட்டு அரசுகளை பேசவைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

விடுதலைப் புலிகள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட பிறகு கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது முற்றிலும் நின்றுள்ளது எனவும் சொல்கிறார் போஸ்.

இந்திய இலங்கை மீனவர்களிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்பதை மையமாக வைத்தே இது போன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என இலங்கையின் தேசிய மீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கத்தின் சமாதான இணைப்பாளன் ஆண்டனி ஜேசுதாசன் எமது வவுனியாச் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு மீனவர்களும் பரஸ்பரம் பேசிக் கொள்ளும் போது பலவிதமான பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தான் நம்புவதாகவும் ஜேசுதான் கூறியுள்ளா

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil