சஸ்பெண்ட்’ செய்தால் தற்கொலை: டாஸ்மாக் சங்கம் மிரட்டல்

திருச்சி: திருச்சியில் கடந்த 24ம் தேதி கூடிய, அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி.,- சி.ஐ.டி.யூ., பாட்டாளி மக்கள் பேரவை, வி.சி.,

ஆகியவை கொண்ட “டாஸ்மாக்’ தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு, பணிநிரந்தரம் உட்பட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், ஆகஸ்ட் 11ம் தேதி காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தப்படும் என்று அறிவித்தது.

தமிழகம் முழுவதும் உள்ள 6,400 கடையில் பணிபுரியும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளரில், பெரும்பாலோனோர் இச்சங்கங்களைச் சேர்ந்தவர்கள். அதனால், ஆகஸ்ட் 11ம் தேதி முதல், சரக்கு கிடைக்குமா? என்று குடிமகன்களிடம் பட்டிமன்றமே நடந்தது.அரசுக்கு ஆதரவான சங்கமாக கருதப்படும் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியன், ஆகஸ்ட் 11ம் தேதி நடக்கும் ஸ்டிரைக்கில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார். தி.மு.க.,வின் தொ.மு.ச., தவிர மற்ற அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளதால், கடையடைப்பு நடப்பது உறுதியாகிவிட்டது. ஸ்டிரைக்கை முறியடிப்பதில் ஆளுங்கட்சியும் தீவிரமாக களமிறங்கி உள்ளது. முதற்கட்டமாக, மாற்று ஆட்களை வைத்து கடையை திறக்கும் வகையில், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கடைக்கும் உள்ள மாற்றுச் சாவியை அதிகாரிகள் வாங்கி வைத்துள்ளனர்.ஸ்டிரைக்கில் பங்கேற்போரின் பெயர் பட்டியலை, அவர்களின் கையெழுத்துடன் பெறுவதற்கான முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். அப்பட்டியலை கொண்டு, ஸ்டிரைக்கில் ஈடுபடுவோர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

பெயர் கூற விரும்பாத மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:”டாஸ்மாக்’ கடைக்கு அரசு கொடுத்தது பூட்டும், இரு சாவியும்தான். தற்போது அதில் ஒன்றையும் பறித்துள்ளனர். இதன்மூலம் ஸ்டிரைக்கை முறியடித்து விடலாம் என்று அரசும், அதிகாரிகளும் கனவு காண்கின்றனர். கடையடைப்பு என்ற முதற்கட்ட போராட்டம் நடக்கும்.அதற்கும் அரசு செவி சாய்க்காவிட்டால், கடை உடைப்பு போராட்டமும், அதற்கடுத்து சிறை நிரப்பும் போராட்டமும் நடத்த தயாராக இருக்கிறோம். ஸ்டிரைக்கில் ஈடுபடுவோரை சஸ்பெண்ட் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அப்படி சஸ்பெண்ட் செய்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம்.நாங்கள் அரசுக்கு எதிராக செயல்படவில்லை. நல்ல படிப்பு படித்தும், பணிப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு இல்லாத வேலை பார்க்கிறோம். ஸ்டிரைக் முறியடிப்பதில் காட்டும் ஆர்வத்தை, பணிநிரந்தம், காலமுறை ஊதியம், 8 மணி நேர வேலை போன்ற எங்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil