ரூ. 51 லட்சம், 21 பவுன் நகைகள், கார், பாஸ்போர்ட் செரினாவிடம் ஒப்படைப்பு

மதுரை: கஞ்சா கடத்தல் வழக்கில் கைதாகி விடுதலையான வி.வி.ஐ.பியின் தோழியான செரினாவிடம் கைப்பற்றப்பட்ட ரூ. 51 லட்சம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே போல 21 பவுன் நகைகளும், காரும், பாஸ்போர்ட்டும் ஒப்படைக்கப்பட்டன.

மதுரை தாசில்தார்நகரைச் சேர்ந்த செரினா பானு. இவருக்கும் மன்னார்குடி வகையாறாவைச் சேர்ந்த தோழியி்ன் கணவருக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வந்ததையடுத்து செரீனா மீதும், அவரது தாயார் ரமீஜா பானு மீதும், இவர்களது கார் டிரைவர் சதீஷ் மீதும் அதிமுக ஆட்சியில் கஞ்சா கேஸ் போடப்பட்டது.

இவர்கள் 30 கிலோ கஞ்சா கடத்தியதாக 2003ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 1.41 கோடி பணம், 21 பவுன் தங்க நகைகள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், இந்த வழக்கில் 3 பேரையும் மதுரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந் நிலையில் செரீனாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்துக்கு வருமான வரி செலுத்தப்படாததால் அதை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை நீதிமன்த்தில் வருமான வரித்துறை மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, வருமானவரித் துறை சார்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், செரினா பானுவுக்கு அளிக்க வேண்டிய 1 கோடியே 40 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயுடன் அதற்கான வட்டித் தொகையை கணக்கிட்டு அந்த மொத்த பணத்தில் இருந்து 97 லட்சத்து 18 ஆயிரத்து 131 ரூபாயை வருமான வரிக்காக எடுத்துக்கொண்டு மீதிப் பணத்தை செரினா வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் செரினாவிடம் கைப்பற்றப்பட்ட கார், நகைகள், பாஸ்போர்ட் ஆகியவற்றையும் போலீசார் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையிலும் இதுவரை அந்த பணம் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

இதையடுத்து இவற்றை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி செரினா சார்பில் அவரது வழக்கறிஞர் கனகராஜ், சந்திரசேகரன் ஆகியோர் மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், வருமான வரி நீங்கலாக கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 30,35,117 பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் செரினாவிடம் கைப்பற்றப்பட்ட பணத்துக்கான வட்டித் தொகை ரூ. 21 லட்சம் மதுரை சொக்கிகுளம் பாங்க் ஆப் பரோடா வங்கியில் முதலீடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் இந்தப் பணத்தை பெற்றுக் கொள்வதற்காக செரினா மதுரை போதைப் பொருள் நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் ஆஜரானார். அப்போது அவரிடம் பாஸ்போர்ட், கார், ரூ. 30,35,117 பணம் மற்றும் பாங்க் ஆப் பரோடா வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ. 21 லட்சத்துக்கான ஆவணப் பத்திரம், கார், பாஸ்போர்ட் ஆகியவை நீதிபதி முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டன.

இந்தப் பணத்தை காமராஜர் சாலையில் உள்ள ஒரு அரசு வங்கியில் டெபாசிட் செய்யும் வரை தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று செரினா கோரினார். இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து வக்கீல்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் சகிதமாக வங்கிக்குச் சென்று மொத்தப் பணம் ரூ. 51 லட்சத்தையும் டெபாசிட் செய்தார் செரினா.

இதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரான செரினாவிடம், அவர் கைதானபோது கைப்பற்றப்பட்டு கருப்பாயூரணி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த, 21 பவுன் நகைகளும் ஒப்படைக்கப்பட்டன.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil