தனித்தமிழீழம் ஒன்றே தீர்வு: சீமான்

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தனி ஈழம்தான் சரியான தீர்வு. எனவே மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை இனப்படுகொலை அரசாக அறிவித்து, தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.


நாம் தமிழர் இயக்கத்தின் அரசியல் மாநாடு மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில், நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் பேசியதாவது:

இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டு தமிழினம் அழிக்கப்பட்டபோது, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அதை தட்டிக் கேட்கவில்லை. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எங்களிடம் தமிழுணர்வு செத்துப்போகவில்லை என்பதைக் காட்டுவதற்காகவே, இந்த மாநாடு நடைபெறுகிறது. உயிரைவிட மேலானதாக மொழியையும் இனத்தையும் நேசிக்கிறோம். உலகின் கடைசித் தமிழன் இருக்கும் வரை ஈழப்போராட்டம் ஓயாது.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்த ஆட்சியாளர்களை நாம் அதிகாரத்திலிருந்து இறக்க வேண்டும்.

தற்போது, ஜனநாயக அரசியலை படுகொலை செய்யும் வகையில் பணநாயக அரசியல் உள்ளது. பணம் கொடுத்து வாக்குரிமையை விலைக்கு வாங்குவதை, நாம் தடுக்க வேண்டும். அதற்கு ஒரே வழி படித்தவர்கள் அரசியலுக்கு வருவதுதான். அரசியல் சாக்கடை என ஒதுங்கிவிடக் கூடாது. படித்தவர்கள் அரசியலுக்கு வராதவரை இந்த அவலநிலை நீடிக்கும் என்றார் சீமான்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திவரும் பயங்கரவாதச் செயல்களுக்கு துணைபோவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களைக் கலைத்து விட்டு, அனைத்து ஈழத்தமிழர்களும் சுதந்திரமாக வாழ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறையில் உள்ள நளினி, குணங்குடி ஹனீபா போன்றவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிங்களக் கடற்படையினரிடமிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கத் தவறிய மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுவரை சிங்களக் கடற்படையினரின் தாக்குதலுக்கு 450 தமிழக மீனவர்கள் பலியாகியுள்ளனர். அவர்களுக்கு உரிய நஷ்டஈட்டை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலேசியாவில் வாழும் 4.5 லட்சம் தமிழர்களுக்கும், மலேசிய அரசியல் சாசன சட்டத்தின்படி குடியுரிமை வழங்க, இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக மலேசிய அரசுடன் பேச்சு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் காந்திய இயக்கம் தமிழருவி மணியன், மலேசிய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, சாகுல் ஹமீது, பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டை முன்னிட்டு மலர் வெளியிடப்பட்டது.

மாநாட்டில், தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர் குடும்பத்தினருக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் பெயர் பொறித்த கேடயம், விருதுகள் வழங்கப்பட்டன. தேவநேயப் பாவாணர் குடும்பத்தினருக்கும் நிதியுதவி அளிக்கப்பட்டது.

முன்னதாக, மாநாட்டையொட்டி தெப்பக்குளத்திலிருந்து மாநாட்டுத் திடல் வரை பேரணி நடைபெற்றது. பேரணியை விரகனூர் சுற்றுச்சாலை அருகே சீமான் பார்வையிட்டார்.

Source & Thanks : newindianews

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil