பென்னாகரம் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது ; தபால் ஓட்டில் தி.மு.க., முன்னிலை

தர்மபுரி : இடைத்தேர்தல் நடந்து முடிந்த பென்னாகரத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை காலையில் துவங்கியது. முதலில் எண்ணப்பட்ட தபால் ஓட்டில் தி.மு.க.,வுக்கு 32 ஓட்டுக்களும், அ.தி.மு.க.,வுக்கு 3 ஓட்டுக்களும், பா.ம.க.,வுக்கு 2 ஓட்டுக்களும் கிடைத்தன.

இந்த தேர்தலில் இன்பசேகரன், ( தி.மு.க.,), அன்பழகன் ( அ.தி.மு.க.,) , தமிழ்க்குமரன் (பா.ம.க.,) காவேரி வர்மன் ( தே.மு.தி.க., ) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 31 பேர் போட்டியிட்டனர். அனைத்து கட்சியினரும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். கட்சியின் தகுதிக்கு ஏற்றவாறு வாக்காளர்களுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டது . கடந்த 27 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. மேச்சேரியில் கார் உடைப்பு தவிர பெரிய அளவில் வன்முறை எதுவும் இல்லாமல் முடிந்தது.

மக்கள் சாரை, சாரையாக வந்து ஓட்டு போட்டனர் 84.95 சதவீதம் பதிவானது. ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 755 ஓட்டுகள் பதிவாகின.கடந்த 2006ம் ஆண்டு தேர்தலை விட, 13 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்னனு ஓட்டு பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் தர்மபுரி அரசு கல்லூரியில் வைக்கப்பட்டது. இங்கு இன்று காலை 8. 25 மணி அளவில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. 14 டேபிள்கள் மூலம் 18 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஒவ்வொரு சுற்று முடிவுகள் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பதால், பகல் 12 மணிக்குள் வெற்றி வேட்பாளர் யார் என்பது தெரிந்து விடும்.

அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்க அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நடந்து முடிந்த திருமங்கலம் . வந்தவாசி, கம்பம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் தி.மு.க., தான் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil