தமிழகத்தின் முதல் பெண் டிஜிபியாக லத்திகா நியமனம்

தமிழக போலீஸ் டிஜிபியாக இருந்தவர் கே.பி.ஜெயின். இவர் வரும் 13ம் தேதி முதல் விடுமுறையில் செல்கிறார். ஏப்ரல் மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். அதனால் புதிய டிஜிபியாக போலீஸ் பயிற்சிக் கல்லூரி தலைவராக உள்ள லத்திகா சரண் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நேற்று இரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழகத்தில் முதல் பெண் போலீஸ் கமிஷனராக 2006ம் ஆண்டு மே மாதம் லத்திகா நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கமிஷனராக பணியாற்றினார். பின், நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டார். பதவி உயர்வு பெற்று போலீஸ் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக பொறுப்பேற்றார். இப்போது தமிழகத்தின் முதல் பெண் டிஜிபியாக லத்திகா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பெண் போலீஸ் அதிகாரிகளில் யாரும் டிஜிபி அந்தஸ்தை பெற்றதில்லை.

ஆனால் ஏற்கனவே உத்ராஞ்சல் உள்பட 2 மாநிலங்களில் பெண் டிஜிபிக்கள் இருந்துள்ளனர். இப்போது 3வது பெண் டிஜிபியாக லத்திகா நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லத்திகா. 1976ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். தமிழகத்தில் கோவை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எஸ்பியாக பணியாற்றினார். சிபிசிஐடி, லஞ்ச ஒழிப்புத்துறை உள்பட பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றியுள்ளார். சென்னையில் அவர் இருந்தபோதுதான் ரவுடிகள் நாகூர் மீரான், வெள்ளை ரவி, பங்க்குமார் போன்ற பெரிய ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

லத்திகாவின் கணவர் சரண். ஒரே பெண் உத்ரா. ஆஸ்திரேலியாவில் பிஎச்டி படித்து வருகிறார். டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள லத்திகா, இன்று காலை முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Source & Thanks : newindianews

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil