மூதாட்டியை பெட்ஷீட்டில் சுருட்டி ரூ.50 ஆயிரம், 50 பவுன் கொள்ளை

சென்னை: பரங்கிமலை பகுதியில் தனியாக வசித்த ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி வீட்டில், பட்டப் பகலில் முகமூடி கும்பல் புகுந்து, அவரது மனைவியை பெட்ஷீட்டில் சுருட்டி போட்டுவிட்டு 50 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை கொள்ளை அடித்து சென்றது.


பரங்கிமலை பேட்ரிக் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் குரூஸ் (80). ஓய்வு பெற்ற சுங்கவரி அதிகாரி. காது சரியாக கேட்காது. இவரது மனைவி ஹாசல் (75). தனியாக வசிக்கின்றனர். குடும்பத்தினர் அனைவரும் வெளிநாட்டில் உள்ளனர். இவர்கள் வீட்டின் பின்புறக் கதவை நேற்று திறந்து வைத்திருந்தனர். மதிய உணவு சாப்பிட்டு விட்டு குரூஸ் தூங்கிவிட்டார். ஹாசல் மட்டும் விழித்திருந்தார். அப்போது 3 மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்புற கதவு வழியாக உள்ளே நுழைந்தனர். அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர்.
ஹாசலை பெட்ஷீட்டில் போட்டு சுருட்டி படுக்க வைத்துள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம், 50 பவுன் நகை மற்றும் ஆவணங்களை எடுத்துள்ளனர். தங்கள் ரேகைகளை கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக, மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பி சென்றனர்.
தூக்கத்தில் இருந்து எழுந்த குரூஸ், பெட்ஷீட்டில் சுருட்டிக் கிடந்த மனைவியை மீட்டு விவரத்தை தெரிந்து கொண்டார். அதன்பின் வெளியில் ஓடிவந்து திருடன், திருடன் என்று கத்தினார். அக்கம் பக்கத்தினர் வந்து கொள்ளையர்களை தேடினர். அதற்குள் அவர்கள் தப்பிவிட்டனர். இதுகுறித்து பரங்கிமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் மனோகர சுந்தரதாஸ், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வீட்டில் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் ‘சங்கர்’ வந்தது. அது, மவுன்ட் பூந்தமல்லி ரோடு வரை சென்று அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் நின்றது. பாபர் மசூதி இடிப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டதால், பல இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு போலீசார் சென்றிருந்தனர்.
இதை பயன்படுத்தி, பட்ட பகலில் முகமூடி கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source & Thanks : dinakaran

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil