அரசு உத்தரவுகளை மதிக்காமல் செயல்படும் தனியார் பள்ளிகள் : கட்டண வசூலில் தீவிரம்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் போடும் உத்தரவுகளை ஒரு பொருட்டாகவே கருதுவது கிடையாது. அடுத்த கல்வியாண்டுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ள நிலையில், அரசைப் பற்றியோ, அதிகாரிகளைப் பற்றியோ சிறிதும் பயப்படாமல், இப்போதே கட்டணங்களை உயர்த்தி வசூலித்து வருகின்றன.

“அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை இப்போது செய்யக் கூடாது’ என்று உத்தரவு போட்ட போதும், அதையும் காதில் வாங்காமல், மாணவர் சேர்க்கைப் பணிகளை முன்னணி பள்ளிகள் துவக்கியுள்ளன.

தமிழகத்தில் தற்போதுள்ள நான்கு விதமான பள்ளிகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் ஆகிய மூன்று பள்ளிகளும், பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் வருகின்றன. மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான நர்சரிப் பள்ளிகள், தொடக்க கல்வித் துறையின் கீழ் வருகின்றன.இதில், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், நர்சரிப் பள்ளிகள் ஆகிய மூன்று விதமான பள்ளிகளிலும், பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப தாறுமாறாக கட்டணங்களை வசூலிக்கின்றன. பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கும், புகார்கள் வந்தால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதற்காகவும், மூன்று துறைகளுக்கும் மாவட்ட அளவில் தனித்தனியாக அதிகாரிகள் இருக்கின்றனர்.

மாவட்டக் கல்வி அதிகாரிகள், முதன்மைக் கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் என பல பேர் இருந்தும், அவர்களின் கண்களில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டு, தங்களது விருப்பம் போல் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பல அதிகாரிகள், பணத்திற்கு ஆசைப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு விலை போகின்ற போக்கும் அதிகரித்து வருகிறது.மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரியாமல், தனியார் பள்ளிகளில் எந்த அத்துமீறலும் நடப்பதற்கு வாய்ப்புகள் கிடையாது. அப்படியிருந்தும், அரசு உத்தரவுகள் எதையும் மதிக்காமல், இஷ்டம் போல் செயல்படுவதும், நினைத்தபடி கட்டணங்களை உயர்த்தி வசூலிப்பதும் நடந்து வருகிறது.

கட்டணக் கொள்ளை அளவுக்கு மீறி போனதால், “கட்டணங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் குழு அமைத்து, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும்’ என தமிழக அரசு அறிவித்தது.இதற்கான சட்டத்தில் கூட, தனியார் பள்ளிகளுக்கு ஆதரவான ஷரத்துகள் இருப்பதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. பள்ளியின் எதிர்கால திட்டம், வளர்ச்சிப் பணிகள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. அப்படியெனில், தனியார் பள்ளிகளின் நீண்ட கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பெற்றோர்களை மொட்டையடிப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

குழுவின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயரை இதுவரை அறிவிக்காத நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணத்தை இப்போதே தனியார் பள்ளிகள் மின்னல் வேகத்தில் வசூலித்து வருகின்றன. ஆறாவது சம்பளக் கமிஷன்படி, ஆசிரியர்களுக்கு சம்பளம் தர வேண்டியிருப்பதால், கூடுதல் கட்டணம் கேட்டும் கெடுபிடி செய்து வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன.அரசைப் பற்றியோ, அதிகாரிகளைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல், கட்டண வசூல் வேட்டையை நடத்தி வருவது, பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை இப்போது நடத்தக் கூடாது என்றும், மே 1ம் தேதிக்குப் பிறகே விண்ணப்பம் வழங்க வேண்டும் என்றும் மெட்ரிக் பள்ளி இயக்குனர் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை அமல்படுத்தவும் தனியார் பள்ளிகள் தயாரில்லை. சென்னையில் உள்ள சில முன்னணி மெட்ரிக் பள்ளிகளில், எல்.கே.ஜி., விண்ணப்பம் வழங்குவதற்கான பணிகள் சத்தமில்லாமல் துவங்கியுள்ளன. சென்னை மட்டுமில்லாமல், மற்ற நகரங்களிலும் முன்கூட்டியே மாணவர் சேர்க்கைப் பணிகளை துவக்கி முடிப்பதற்கு, தனியார் பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளன.முன்கூட்டியே நடக்கும், “அட்மிஷன்’ ரத்து செய்யப்படுமா, கல்விக் கட்டண உயர்வு, இதர கட்டணங்கள் உயர்வுகளை பள்ளிகள் திரும்பப் பெறுவதற்கும், கூடுதல் தொகையை பெற்றோருக்கு திருப்பித் தரவும் நடவடிக்கை எடுக்கப்படுமா என, எதுவுமே தெரியாத நிலை தற்போது உள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil