யுத்த கசப்பு இனங்களுக்கிடையில் நிரந்தர வடுக்களாகத்தான் இருக்கும் – தேசிய சமாதான பேரவை
Published on November 19, 2011-4:56 pm · No Comments
அரசாங்கத்திற்கும் தமிழ்த்தலைவர்களுக்கும் இடையேயும், இனங்களுக்கு இடையிலும்; உண்மையான நல்லிணக்கம் ஏற்படாத பட்சத்தில் . யுத்தத்தின் கடைசிக்கட்டத்தில் ஏற்பட்ட கசப்பும் பகைமையும் இனங்களுக்கு இடையே நிரந்தர வடுக்களாகத்தான் இருக்கும் என தேசிய சமாதானப் பேரவை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தேசிய சமாதானப்பேரவை வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
விடுதலைப்புலிகளை 2009 இல் இராணுவ ரீதியில் தோற்கடித்ததுடன் 3 தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தமும் பயங்கரவாதமும் முடிவுக்கு வந்தன. அதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், அழிக்கப்பட்ட சொத்துக்கள், அபிவிருத்திகள், உளவியல்
தாக்கங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் கணக்கில் அடங்கா.
அரசாங்கத்திற்கும் தமிழ்த்தலைவர்களுக்கும் இடையேயும் இனங்களுக்கு இடையிலும் உண்மையான நல்லிணக்கம் ஏற்படாத பட்சத்தில் . யுத்தத்தின் கடைசிக்கட்டத்தில் ஏற்பட்ட கசப்பும் பகைமையும் இனங்களுக்கு இடையே நிரந்தரவடுக்களாக இருக்கும்.
சமாதான வழியில் சமாதானத்தை அடைவதற்கு நோர்வே அரசின் அனுசரணையுடன் 2002-2006 களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியோ கடைசியான முயற்சியாக இருந்தது. தேசிய சமாதான சபை கடைசி சமாதான முயற்சியை ஆதரித்தது.
யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் போர்க்களம் செல்லாதபடி சமாதானத்தை நோக்கியதான மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்க எம்மால் முடியாமல் போயிற்று. இது வருத்தத்திற்குரியது.
இராணுவத்தீர்விலும் பார்க்க சமாதான முயற்சியின் மூலம் காணப்பட்ட தீர்வு மிகவும் உயர்வானதாக இருந்திருக்கும். அதன் மூலம் அரசியல் தீர்வு ஒன்றைக்கண்டிருக்க முடியும். அம்முயற்சி வெற்றி பெற்றிருந்தால் உயிரிழப்புக்கள் மற்றும் சொத்து அழிவுகள் தவிர்க்கப்பட்டிருக்கும். தோல்வி கண்டிருப்பினும் யுத்தத்தினை சமாதான வழியில் முடிவுக்குக்கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சிகள் துணிச்சலானதாகவும்
தேவையானதாகவும் அமைந்திருந்தன.
இன முரண்பாடுகளின் ஆணிவேர் சரியாக கவனிக்கப்படாததால் தான் யுத்தமும் பயங்கரவாதமும் ஏற்பட்டன. யுத்தம் முடிவுற்றாலும் இன்னும் அவை கவனிக்கப்படவேண்டியவையாகும்.
நோர்வேயின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட சமாதான முயற்சி சமாதான தீர்வை நோக்கியே நகர்ந்தது. ஒரு கட்டத்தில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வு பற்றி ஆராய்வதற்கு அரசும் விடுதலைப்புலிகளும் இணங்கியிருந்தனர். அது தோற்றுப்போனதற்கான காரணங்களை நாம் படிக்க வேண்டும். எதிர்காலத்தில் அப்பாடத்தை பயன்படுத்த வேண்டும்.
சமாதான முயற்சி பற்றி நோர்வே ஆராய்ந்தது. திறந்த வெளிப்பாட்டுக்கு உதாரணமாக அது அமைகின்றது. இப்போது யுத்தம் முடிந்து விட்டது. அரசியல் தீர்வு ஒன்றைக் காணவும் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தியை முன்னெடுக்கவும் ஆதரவளிக்க வேண்டும் என்று நாம் நோர்வேயையும் சர்வதேச சமூகத்தையும் கோருகின்றோம்.
சமாதான முயற்சியில் நேரடியாக ஈடுபட்டிருந்த அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தொடர்ந்தும் அம்முயற்சியில் ஈடுபட்டு இலங்கையில் சமாதானத்தையும் நீதியையும் நிலைநிறுத்த உதவவேண்டும்.