சிவில் சமூக அமைப்புகள் பலம் பெறுவதிலேயே ஜனநாயக போராட்டங்களின் வெற்றி தங்கியுள்ளது – சிவசக்தி ஆனந்தன் எம்.பி

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் வாழ்வுரிமை பிரச்சினைகளுக்கு
தீர்வைக்காண ஜனநாயகப்போராட்டங்களை முன்னெடுப்பதாக இருந்தால், சிவில் சமுக
அமைப்புகளை பலம் பெறச்செய்வதிலேயே அதன் வெற்றி முழுவதுமாக தங்கியுள்ளது என
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த 30.08.2014 அன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்ட கட்டாயப்படுத்தப்பட்டு
காணாமல் போகச்செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தின நிகழ்வில்
கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.*அவர் மேலும் தனது உரையில் தெரிவித்ததாவது,*
காணாமல் போகச்செய்யப்பட்டோர் தொடர்பில் அரசை பொறுப்புக்கூறுமாறு கோருதல்,
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்தல், தமிழ் மக்களின் பூர்வீக
காணிகளை அபகரிக்கும் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தல், தமிழ் மக்களின் அரசியல்
தீர்வு உட்பட உரிமை சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வை காண்பதாக
இருந்தால், தொய்வுறாத தொடர்ச்சியான ஜனநாயக போராட்டங்களை நடத்துவது மிகவும்
முக்கியமாகும்.

மக்களை ஒன்று திரட்டி ஜனநாயக போராட்டங்களை நடத்துவோம் என்று அவ்வப்போது
உதட்டளவில் கூறிக்கொண்டிருப்பதால் மட்டும் எதனையும் சாதித்துவிட முடியாது.
மாறாக சிவில் சமுக அமைப்புகளைக் கட்டமைத்து, அவற்றை பலம்பெறச்செய்து,
அவற்றுக்கும் கூட்டமைப்புக்கும் இடையே நல்லுறவை வளர்த்துக்கொள்வதிலேயே இந்த
ஜனநாயக போராட்டங்களின் வெற்றி சாத்தியமாகும்.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் இன்றைய காலத்துக்கு அவசியமான ஒரு
பணியான சிவில் சமுக அமைப்புகளை ஒருங்கிணைத்து பலப்படுத்தும் முயற்சியை
மேற்கொண்டிருந்தார். ஆயினும் சிலரின் அரசியல் தலையீடுகள் காரணமாக அந்த முயற்சி
வெற்றியளிக்காமல் போய் விட்டது.

எனவே வடக்கு-கிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மக்களின் உரிமை சார்ந்து
செயல்படக்கூடிய தமிழ் அரசியல் கட்சிகள், சர்வ மதத்தலைவர்கள், சிவில் சமூக மனித
உரிமை செயல்பாட்டாளர்கள், புத்திஜீவிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களையும்,
அமைப்புகளையும், சர்வதேச நாடுகளில் இருக்கக்கூடிய தமிழர் நலன் சார்ந்து
சிந்தித்து செயலாற்றக்கூடிய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து தமிழ் தேசியசபை
ஒன்றை அமைக்கும் முயற்சிக்கு எல்லோரும் மனம் விரும்பி பூரண ஒத்துழைப்பு நல்க
வேண்டும் எனவும்,

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை போன்றவர்கள் மீண்டும் அந்த முயற்சியில்
ஈடுபட வேண்டும் எனவும், அவர்களுக்கு தமிழ் மக்களின் நலன்களில் அக்கறையுள்ள
அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் சிவசக்தி ஆனந்தன் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.