சட்டப்படி 2016 வரை ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது!- சுமந்திரன்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பலதரப்புகளிலும் இருந்து பலவாறாக பேசப்படுகின்ற நிலையில், ஜனாதிபதி தேர்தலை 2016ம் ஆண்டு வரை நடத்துவதற்கு சட்டத்திலே இடம் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம், கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் பதவிக்காலம் 2016ம் ஆண்டே நிறைவடையவுள்ள நிலையில் பல எதிர்பார்ப்புகளை குழப்புவதற்காகவோ இன்றேல் வேறு எதற்காகவோ, உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா புதியதொரு கருத்தை முன்வைத்துள்ளார்.

18வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஏற்கெனவே ஜனாதிபதியாக இருந்த ஒருவர் 3வது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே அப்புதிய கருத்தாகும்.

18ம் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்னதாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னுடைய இரண்டாம் காலத்தை ஆரம்பித்து விட்ட காரணத்தினாலே, அவர் ஆரம்பித்த வேளையிலே, அது அவருடைய இரண்டாம் பதவிக்காலத்தின் இறுதியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு பிறகு வந்த சட்டத்திருத்தத்தின் பிரகாரம் அவர், இம்முறையுள்ள தேர்தலில் போட்டியிட முடியாது என்ற ஒரு சட்ட பிரச்சினையை முன்னாள் பிரதம நீதியரசர் கிளப்பியிருக்கின்றார்.

அவரது கருத்தை ஆராய்ந்து பார்த்தால், சட்டத்தின் பிரகாரம் அது நீதியானதாகவே காணப்படுகின்றது. 2010ம் ஆண்டு ஜனவரி மாத காலத்தில் 18வது திருத்தச்சட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை. இருந்தும் தற்போது இச்சட்டம் காணப்படுவதன் காரணத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது.

எனினும் இப்படியானதொரு கருத்தை 3 வருடங்களுக்கு பிறகு முன்வைத்ததற்கான காரணம் என்ன என்ற சந்தேகமும் எம்மில் எழுந்துள்ளது.

இதை இந்நேரத்தில் தெரிவிப்பது யாருடைய தேவையாக இருக்கும். கட்சிக்குள் பிரச்சினையொன்று இருக்கின்றதா?

தற்போதுள்ள ஜனாதிபதி பதவியில் உள்ளவரை நீக்கிவிட்டு ஐ.ம.சு.மு. கட்சியில் இருக்கும் வேறொருவரை தேர்தலில் போட்டியிட வைப்பதா?

இல்லையேல் ஜாதிக ஹெல உறுமயவில் உள்ளவர்கள், சரத் என் சில்வாவை இவ்வாறு கூறுமாறு தூண்டி விட்டனரா?

அதுவும் இல்லையாயின் குடும்பத்துக்குள்ளேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கொடுத்த வாய்ப்பு போதும். குடும்பத்துக்குள் வேரு யாராவது போட்டியிடலாம் என்ற எண்ணம் இருக்கின்றதா? என்ற சந்தேகமும் எழுகின்றது.

என்னவாக இருந்தாலும் யுத்தத்தை நாமே முடிவுக்கு கொண்டு வந்தோம் என்று கூறிய காலத்தில் அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் இருந்த புகழ் தற்போது மிகவும் குறைந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் வந்தால் மீண்டும் வெற்றியடைய முடியுமா என்ற சந்தேகமும் பயமும் ஏற்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு காரணத்தை வைத்தாவது இதில் வெற்றி பெற வேண்டும் என்ற வழிமுறைகளையும் தேடிக்கொண்டு இருப்பது இதனூடாக நன்றாகவே தெரிகிறது.

இதற்கு பிரதான காரணம் யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் ஆகின்ற நிலையில் நாட்டில் ஊழல் அதிகரித்துக்கொண்டே போகின்றது. நாட்டை சரியான முறையில் ஆட்சி செய்ய முடியாது இருக்கும் சூழ்நிலை காணப்படுகின்றது.

ஊவா மாகாண சபை தேர்தலின் முடிவில் ஆளும் கட்சிக்கான புகழ் எந்த அளவுக்கு குறைந்துள்ளது என்பதை வெளிப்படையாக தெரிந்துகொள்ள முடியும்.

நாட்டை இனபேதமின்றி கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகள் இல்லாத காரணத்தினால் தான் இந்திய அரசாங்கம் இலங்கை விடயத்தில் தலையீடு செய்கின்றது. ஜனாதிபதியினுடைய குடும்பமே நாட்டை ஆட்சிசெய்து கொண்டிருக்கின்றது.

நாட்டில் இனபேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் என்பதை புரிந்து கொள்ளாமல் அரசாங்கம் ஆட்சி செய்யுமாயின் வெகுதூரத்துக்கு இது நிலைத்து நிற்காது.

ஆகையினால் யாராக இருந்தாலும் இந்நாட்டில் வாழுகின்ற மற்ற தேசிய இனங்களோடு ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து அரச அதிகாரங்களை எவ்வாறு முழுமையான விதத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்ற தீர்மானத்தை பேசி முடிவெடுப்பதை தவிர, தொடர்ச்சியாக எவரும் இந்நாட்டிலே ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியாது என்பதை திட்டவட்டமாக கூறிக் கொள்கின்றோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.