காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து பெபரல் அதிருப்தி

காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து பெபரல் அமைப்பு அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
ஊவா மாகாணத்தில் தேர்தல் விதி மீறல்கள் மற்றும் தேர்தல் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

காவல்துறை உத்தியோகத்தர்கள் ஒரு சில வேட்பாளர்களுக்கு பக்கச் சார்பாக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்த காவல்துறை மா அதிபரும், தேர்தல் ஆணையாளரும் நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும், அவை காவல்துறை உத்தியோகத்தர்களினால் அமுல்படுத்தப்படுவதில்லை என பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மொனராகல் மாவட்டத்தில் கடுமையான வன்முறைகள் மற்றும் தேர்தல் விதி மீறல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அரச அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் அதிகளவில் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தலைமைகளின் உத்தரவினை மீறிச் செயற்பட்டால் பாதக நிலைமைகள் ஏற்படக் கூடுமென்ற அச்சம் காரணமாக, அரச அதிகாரிகள் பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் போன்ற புத்திஜீவிகள் இந்த அரசியல் அழுத்தங்கள் குறித்து எதிர்ப்பை வெளியிடாமை அதிருப்தி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களைக் கொண்டு ஆளும் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேட்பாளர்களின் நன்மதிப்பை உயர்த்தும் வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.