ஆங்கில‌‌‌ப் புத்தாண்டு பொது‌ப் பலன் 2012

ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறையில் மேல்நோக்கு கொண்ட உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, அஷ்டமி திதி, வரீயான் நாமயோகம், பத்திரை நாமகரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்தயோக நன்னாளில் 1.1.2012ஆம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி தன்னம்பிக்கை கிரகமான புதனின் ஆதிக்கத்தில் (2+0+1+2=5) இந்தாண்டு பிறப்பதால் மக்களிடையே சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். அதிகம் சம்பாதிக்க வேண்டும்.அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை மேலோங்கும். ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரிய பதவியில் அமர்வார்கள்.

பிரபலங்களின் சுயசரிதை நூல்களால் ஆங்காங்கே குழப்பங்கள் உண்டாகும். அறிவியலில் இயற்பியல், விளையாட்டுத்துறையில் நவீன நூல்கள் வெளியாகும். தேர்வு முறை எளிதாகும். செய்முறை தேர்வுக்கும் முக்கியத்துவம் உண்டாகும். செயற்கை கோள்கள் அதிகம் ஏவப்படும். செவ்வாய் மண்டலம் பற்றிய சில உண்மைகள் கண்டறியப்படும். வான்மண்டலத்தில் இருக்கும் கனிம கரிம வளங்களை பயன்படுத்த அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆயத்தமாகும். குழந்தைகளின் பேச்சுத்திறமை அதிகரிக்கும்.

ஞான கிரகமான கேதுவின் ஆதிக்கத்தில் இந்தாண்டின் விதி எண் (1+1+2+0+1+2=7) வருவதால் ஆன்மீகத்தின் பக்கம் மக்கள் மனம் திரும்பும். கோவிலை விட தியான மையங்களிலும், சித்தர் பீடங்களிலும் கூட்டம் அலைமோதும். ஆனால் ஆன்மீகத் தலைவர்களின் உடல்நலம் பாதிக்கும். மக்களின் அடிமனதில் சின்ன பயம் வரும். இந்தாண்டின் விதி எண் கேதுவின் ஆதிக்கத்தில் வருவதால் நாகத்தின் பெயருடையவர்கள் புகழடைவார்கள். சின்ன சின்ன பதவிகளை பிடிப்பதற்குக் கூட பெரிய சண்டைகள் வரும்.

அறிவு ஜீவிகளின் ஆலோசனைகளை மக்கள் புறக்கணிப்பார்கள். கடன் வாங்குபவர்கள் அதிகமாவார்கள். கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாதவர்களின் எண்ணிக்கை உயரும். உலக நடப்புகளை அறிந்துகொள்ள மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். பிரபலங்களைப் பற்றிய வதந்திகள் அதிகரிக்கும். பத்திரிக்கைத் துறையினர் பாதிப்படைவார்கள். ஐ.டி துறையினருக்கு சம்பளம் குறையும். வேலை இழப்பு அதிகரிக்கும். பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் அதிகரிக்கும். மாணவர்களிடையே கவனச்சிதைவு அதிகரிக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இந்தாண்டு பிறப்பதால் மழை அதிகமாகும். உணவு உற்பத்தி கூடும். ஆனால் பூச்சித் தொல்லையாலும் விவசாயம் பாதிக்கும். உரம் விலை உயரும். சீனா, ஜப்பான், திபெத் பாதிப்புக்குள்ளாகும். அதிக மைலேஜ் தரக்கூடிய வாகனங்களின் உற்பத்தி அதிகரிக்கும். நவீன இரு சக்கர வாகனங்கள் சந்தைக்கு வரும். கணினி, செல்போன் உள்ளிட்ட அனைத்து வகை எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலைகள் வீழ்ச்சியடையும்.

22.6.2012 வரை செவ்வாய் சிம்ம ராசியிலேயே நிற்பதால் சிம்ம ராசிக்காரர்களின் உடல்நிலை பாதிக்கும். ரியல் எஸ்டேட் தொழில் நலிவடையும். ஆனால் அக்டோபர் மாதத்திலிருந்து சூடுபிடிக்கும். காதலர்களுக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும். சாலைகள் நவீனமயமாகும். நகர வாழ்க்கையின் மோகம் குறைந்து புறநகரத்தை ஒட்டியிருக்கும் பகுதிகளுக்கு மக்கள் இடம் பெயர்வார்கள். எதிரும் புதிருமாக இருந்தவர்கள் ஒன்று சேர்ந்து புதிய கூட்டணி உருவாகும். எதிர்கட்சிகள் வலுவடையும்.

16.5.2012 வரை குரு பகவான் மேஷத்தில் நிற்பதால் கால்நடைகள் பாதிக்கும். 17.5.2012 முதல் குரு பகவான் ரிஷபத்தில் அமர்வதால் இந்தியாவில் மகான்கள் அவதரிப்பார்கள். காவல் துறை நவீனமயமாகும். சாதாரண அடித்தட்டு மக்களின் குரலுக்கு நீதிமன்றம் செவி சாய்க்கும். குற்றவா‌ளிகளுக்கு எதிரான தீர்ப்புகள் கடுமையாகும். சமையல் எரிவாயுவின் விலை உயரும். தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயரும்.

காலப்புருஷனின் பனிரெண்டாவது ராசியான மீனத்தில் இந்தாண்டு பிறப்பதால் மக்களிடையே சேமிப்புகள் கரையும். எங்கும் எதிலும் பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். எல்லா சுகங்களையும் அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். சுற்றுலா‌த் துறை சூடு பிடிக்கும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். கடல்வாழ் உயிரினங்களை காப்பாற்ற சர்வதேச அளவில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உலகெங்கும் பனிமலைகள் உருகி கடலின் நீர் மட்டம் உயரும். கடல் உணவு வகைகளை மக்கள் விரும்பி உண்ணுவார்கள். பால் உற்பத்தி அதிகரிக்கும். விளையாட்டுத்துறையில் இந்தியா சாதிக்கும்.

இந்தப் புத்தாண்டு மக்களிடையே விழிப்புணர்வையும், போட்டி மனப்பான்மையையும் அதிகப்படுத்துவதாக இருக்கும்.

பரிகாரம்:

சுயமரியாதை கிரகமான புதன் மற்றும் ஞான கிரகமான கேதுவின் ஆதிக்கத்திலும் இந்தாண்டு பிறப்பதால் கிடைக்காததை நினைத்து ஏங்கித் தவிக்காமல் இருப்பதை வைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து காட்டுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *