காதலனுடன் சுற்றித்திரிந்துவிட்டு பொய்யான முறைப்பாடு செய்த பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

தனது காதலனுடன் சுற்றித்திரிந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டிருந்த பெண்ணொருவர், தான் சட்டவிரோதமாக உள்ளுறுப்புகள் அகற்றி விற்பனை
செய்யும் போலி வைத்தியசாலையொன்றில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் தப்பி வந்ததாக
பொய்கூறியமை அம்பலமாகியுள்ளது.

தம்புள்ளையைச் சேர்ந்த இப்பெண் ஒக்டோபர் 18 ஆம் திகதி கண்டியிலுள்ள
வைத்தியசாலைக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.  ஆனால் அவர் அன்று வீடு
திரும்பவில்லை.

அப்பெண்ணை தேடிக்களைத்த அவரின் கணவர், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்தார். இது
குறித்து  நாடுமுழுவதும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

15 நாட்களின் பின்னர் அப்பெண் தம்புள்ளையிலுள்ள வீட்டிற்குத் திரும்பி
வந்தார்.

தான் கண்டியில் மேற்படி வைத்தியசாலையில் இருந்தபோது, தன்னை அணுகிய இருநபர்கள்,
தாம் தென்னிந்தியாவிலிருந்து வந்த மருத்துவர்கள் எனகூறிக்கொண்டு,  தனக்கு இலவச
மருத்துவச் சிகிச்சை செய்ய முன்வந்தனர் எனவும் அப்பெண் கூறினார்.

அதன்பின் தான் வான் ஒன்றில் தெரியாத இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும்
அங்கு மேலும் நான்கு பெண்களுடன் ஏறத்தாழ கைதிபோல் வைக்கப்பட்டிருந்தாகவும் அவர்
கூறினார்.

மருத்துவச சத்திரசிகிச்சையாளர்கள் போல் ஆடை அணிந்திருந்த குழுவொன்று அங்கு
காணப்பட்டதாகவும் அவர்கள் தனது உள்ளுறுப்புகளை அகற்றி அதிகவிலைக்கு இந்தியாவில்
விற்பனை செய்ய  முயன்றதாகவும் தான் அறிந்துகொண்டதாக அவர் கூறினார்.

பின்னர் தன்மீது அனுதாபம் கொண்ட ஊழியர் ஒருவரின் உதவியுடன்
வைத்தியசாலையிலிருந்து தப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

‘எனக்குத் தெரியாத இடமொன்றிலிருந்து இரவு ரயிலொன்றில் நான் ஏறினேன்.
அதன்பின்நான் கோட்டை ரயில் நிலையத்தில் காணப்பட்டேன். பின்னர் ஒரு தம்பதி எனக்கு
500 ரூபாவை தந்துதவினர். அதன்மூலம் நான் தம்புள்ளைக்கு திரும்பிவந்தேன்’ என அப்பெண்
கூறினார்.

இப்பெண் கூறிய கதை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக விசாரிப்பதற்கு விசேட பயிற்சி பெற்ற பொலிஸ் புலனாய்வுக் குழுக்களும்
நியமிக்கப்பட்டன.

சுமார் இரு மாதகால கடும் விசாரணைகளுக்குப் பின்னர் பொலிஸார் உண்மையை
கண்டறிந்தனர்.

இது தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன சண்டே டைம்ஸுக்கு கூறுகையில் ‘உண்மைக்
கதை என்னவென்றால் அப்பெண் மருத்துவமனைக்குச் செல்லாமல் காதலர் ஒருவருடன்
பொலன்னறுவைக்குச்  சென்று விடுதி அறையொன்றை பதிவுசெய்துள்ளார்.

அன்றிரவு இந்த ஜோடி விடுதியிலிருந்து வெளியேறி தம்புள்ளைக்கு செல்லத்
தீர்மானித்துள்ளனர். பொலிஸ்ரோந்துப் பிரிவினரால் இவர்கள் விசாரிக்கப்பட்டபோது தாம்
அங்கிருப்பதற்கான காரணம் எதையும் இவர்களால் கூறமுடியவில்லை.

அதனால் இவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர்
நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர். நாடோடி கட்டளைச்சட்டத்தின்கீழ் இவர்கள் குற்றம்
சுமத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இத்தகைய இந்திய மருத்துவர்களோ போலி மருத்துவ நிலையமோ இருக்கவில்லை. தான் 14
நாட்கள் விளக்கமறியலில் இருந்ததை மறைப்பதற்காக அவர் கட்டிய கதை இது.

ஆனால் இக்காலத்தில்  விசாரணைகளுக்காக பெருமளவு பொதுமக்கள் பணமும் பொலிஸாரின்
நேரமும் இதற்கு விரயமாகியுள்ளது. அத்துடன் நாட்டின் மதிப்பும்
பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உள்ளுறுப்புகளை திருடி விற்கும் சம்பவங்கள் ஏனைய ஆசியநாடுகள், ஆபிரிக்க
மறறும் 3 உலக நாடுகளில் மாத்திரமே நடைபெறுகிறது. இலங்கை ஒருபோதும் இதில் விழவில்லை.
அதனால்தான் இம் முழு விடயத்தினதும் அடித்தளத்தை கண்டறிய நாம் உறுதிபூண்டோம்’
என்றார்.

இப்பெண் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.  பொலிஸாரிடம்
பொய்யான முறைப்பாடு செய்த குற்றத்திற்காக அவருக்கு 25 வருடங்களுக்கு
ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *