உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் முகேஷ், அனில் அம்பானி திடீர் சந்திப்பு

டெல்லி: ரிலையன்ஸ், இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது தம்பி அனில் அம்பானி ஆகியோர் தனித் தனியே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை இன்று திடீரென சந்தித்துப் பேசினர்.

50 நிமிட இடைவெளிக்குள் இவர்களின் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது குறித்துத் தெரியவில்லை.

வடக்கு பிளாக்கில் உள்ள ப.சிதம்பரத்தின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. முகேஷுடன், ஐரோப்பாவின் 2வது மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான பிபி பிஎல்சியின் தலைமை செயலதிகாரி பாப் டட்லியும் உடன் இருந்தார். இந்த சந்திப்பு கால் மணி நேரம் நடந்தது.

அதன் பின்னர் அனில் அம்பானி சிறிது நேரம் கழித்து வந்தார். அவர் பத்து நிமிடம் ப.சிதம்பரத்துடன் பேசிக் கொண்டிருந்தார்.

சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த அனில் அம்பானியிடம் செய்தியாளர்கள் ஏன் இந்த திடீர் சந்திப்பு என்று கேட்டனர். ஆனால் அதற்குப் பதிலளிக்க மறுத்து விட்டுப் போய் விட்டார் அனில்.

அனில் அம்பானி வழக்கமாக ப.சிதம்பரத்தை அடிக்கடி சந்திக்கக் கூடியவர். பொதுவாக புதன்கிழமைகளில் அவர் ப.சிதம்பரத்தை சந்திக்க வருவார். ஆனால் முகேஷ் அம்பானி பல மாதங்களுக்குப் பின்னர் ப.சிதம்பரத்தை சந்தித்துள்ளார். மேலும் இரு சகோதரர்களும் அடுத்தடுத்து ப.சிதம்பரத்தை சந்தித்ததால் எதிர்பார்ப்பு எழுந்தது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *