வெளிமாநில தேர்தல் ஆணையர்கள் வருகை; தமிழக உள்ளாட்சி தேர்தலை பார்வையிடுகிறார்கள்

posted in: தமிழ்நாடு | 0

தமிழக உள்ளாட்சித்தேர்தலை பார்வையிட வெளிமாநிலங்களில் இருந்து தேர்தல் ஆணையர்கள் வர இருப்பதாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறினார்.


சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக உள்ளாட்சித்தேர்தல் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களின் கருத்துக்களை என்னிடம் தெரிவித்தார்கள். 2006-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் மிகப்பெரிய அளவில் வன்முறை நடந்தது. இந்த வன்முறையை நீதிபதிகள் கண்டித்தனர். அந்த நேரத்தில் தேர்தல் பார்வையாளர்களாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எழுதி கொடுத்த அறிக்கைகள் ஏற்கப்படாமல், தலைமை செயலாளர் எழுதி கொடுத்த அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

அப்போது ஏற்பட்ட சங்கடத்தின் காரணமாக சென்னையில் பணியாற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தயக்கம் தெரிவித்தனர். நான் அவர்களுக்கு, 100 சதவீதம் சுதந்திரமாக, நேர்மையாக செயல்பட்டு தேர்தலை கண்காணித்து அறிக்கை சமர்ப்பியுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். தேர்தல் பார்வையாளர்களாக செயல்படுகிறவர்களின் சுதந்திரத்தில் மாநில தேர்தல் ஆணையமோ, மற்ற எந்த உயர் அதிகாரிகளோ குறுக்கிட மாட்டார்கள். எல்லா மாவட்டத்திலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

சென்னையில் 3 கண்காணிப்பார்கள் இருப்பார்கள். தற்போது நடைபெறும் தேர்தல் எதிர்வரும் உள்ளாட்சித்தேர்தலுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்களிடம் கூறியிருக்கிறேன். இது தவிர இந்தியாவிலேயே முதல் முறையாக உள்ளாட்சித்தேர்தலை கண்காணிப்பதற்காக வெளிமாநிலத்தில் இருந்து தேர்தல் ஆணையர்கள் பார்வையாளராக வருகிறார்கள். அவர்கள் இங்கே நடக்கும் தேர்தலை கண்காணிப்பார்கள்.

இந்த தேர்தலின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை நாங்கள் பார்வையாளராக அழைத்திருக்கிறோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்கள் `49 ஓ’வை பயன்படுத்தினார்கள். உள்ளாட்சித்தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்கள் வாக்குசாவடியில் `70′ விண்ணப்ப படிவத்தை வாங்கி நிரப்பிக்கொடுக்கலாம். மற்றபடி சட்டமன்ற தேர்தலில் பின்பற்றப்பட்ட முறைகளே இந்த தேர்தலில் பின்பற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.