தி.மு.க.,வுக்கு ஓட்டு போட ஊர் கட்டுப்பாடு: மீறினால் அபராதம்

posted in: தமிழ்நாடு | 0

ஓசூர் :சூளகிரி அருகே, ஊராட்சித் தலைவர் தேர்தலில், தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டுப்போட வலியுறுத்தி, ஊர் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

மீறுபவர்கள், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில், 42 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் சூளகிரி அருகே, செம்மபரசனப்பள்ளி ஊராட்சியில் உள்ள பீளாளம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
ஊராட்சியில் அதிகபட்சமாக இந்த கிராமத்தில் மட்டும், 569 ஓட்டுகள் உள்ளன. செம்பரசனப்பள்ளி ஊராட்சித் தலைவராக, அப்பையா உள்ளார். தற்போது நடக்கும் தேர்தலில், செம்பரசனப்பள்ளியைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் சீனிவாசன், பீளாளத்தைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் சிவசங்கர், மடத்தூரைச் சேர்ந்த பாப்பிரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சிவசங்கருக்கு ஆதரவாக, ஊர்பஞ்சாயத்தார் செயல்படுகின்றனர். நேற்று முன்தினம் மாலை, ஊர் கவுண்டர் சின்னதாயப்பா தலைமையில், ஊர்பஞ்சாயத்து நடந்தது.

இக்கூட்டத்தில், ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சிவசங்கருக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும், தவறாமல் ஓட்டுப்போட வேண்டும்; ஊர் பஞ்சாயத்தை மீறி, யாராவது மற்ற வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போட்டால், அவர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு ஊரை விட்டு தள்ளி வைக்கப்படுவர் என்றும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும், தீர்மானம் நிறைவேற்றினர்.பஞ்சாயத்து தீர்ப்பால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த மாரப்பா கூறியதாவது:ஒவ்வொரு ஊராட்சித் தேர்தலிலும், இதே போல் ஊர்பஞ்சாயத்தார் கூடி, யாராவது ஒருவருக்கு ஓட்டுப்போட கூறி, நிர்பந்தம் செய்கின்றனர். மீறி எந்த குடும்பமாவது ஓட்டுப் போட்டால், அவர்களுடன் யாரும் பேசாமல், நல்லது, கெட்டது எதுக்கும் கலந்து கொள்ளாமல், ஊரை விட்டு ஒதுக்கி விடுகின்றனர்.அதனால், ஊருக்கு பயந்து அவர்கள் கூறும் நபருக்கு, ஓட்டுப் போட வேண்டிய உள்ளது. இந்த முறையும், வேறுவழியில்லாமல் அவருக்குதான் ஓட்டுப் போட முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு மாரப்பா தெரிவித்தார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.