சீனா, பாகிஸ்தான் நாடுகளின் போட்டியால்இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி பாதிப்பு

posted in: வர்த்தகம் | 0

சென்னை:சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கடுமையான போட்டியால், இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளின் போட்டி மட்டுமின்றி, மத்திய அரசின் நிலையற்ற ஏற்றுமதி கொள்கை, விலை உயர்வு ஆகியவற்றாலும் வெங்காய ஏற்றுமதி சரிவடைந்துள்ளதாக ஏற்றுதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இம்மாதம், 20ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலுமாக, நாட்டின் வெங்காய ஏற்றுமதி, 4,000 – 5,000 டன் என்ற அளவில் மிகவும் குறைவாக இருந்தது என, மும்பையைச் சேர்ந்த வேளாண் பொருள்கள் ஏற்றுமதி கூட்டமைப்பின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்திய வெங்காயத்திற்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, வளைகுடா நாடுகள், தூர கிழக்கு நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் தேவை அதிகளவில் உள்ளது. இருப்பினும், சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஏற்றுமதியாகும் வெங்காயத்தின் விலை மிகவும் குறைவாக இருப்பதால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இது மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. வெங்காய உற்பத்தியில், சீனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மத்திய அரசு, வெங்காய ஏற்றுமதிக்கான தடையை, கடந்த 20ம் தேதியன்று விலக்கிக் கொண்டது. இதுமட்டுமின்றி, வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை, டன் ஒன்றுக்கு 475 டாலராகவும் நிர்ணயம் செய்தது. அதே சமயம், சீன மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெங்காய ஏற்றுமதி விலை முறையே 300 மற்றும் 325 டாலராக உள்ளது. இதனால், இந்நாடுகளுடன், இந்திய ஏற்றுமதியாளர்கள் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இம்மாதம், 9ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலான காலத்தில், மத்திய அரசு, வெங்காய ஏற்றுமதிக்கு தடைவிதித்திருந்தது. இதனால், அதிகளவிலான சிங்கப்பூர் வர்த்தகர்கள், சீன ஏற்றுமதியாளர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். பொதுவாக, நம்நாட்டிலிருந்து மாதத்திற்கு 70 ஆயிரம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.முன்பு, வளைகுடா நாடுகளில், வெள்ள பாதிப்பு ஏற்படும் போது, இந்திய வெங்காயம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்த நிலை முற்றிலும் மாறி, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளப்படுகிறது என, வேளாண் பொருள்கள் ஏற்றுமதி கூட்டமைப்பின் உயரதிகாரி மேலும் தெரிவித்தார். “நபெட்’ சந்தையிலிருந்து ஏற்றுமதியாகும் வெங்காயம், கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களை விட, நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் மிகவும் குறைந்து போயுள்ளது.நடப்பு 2011ம் ஆண்டு, ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்படம்பர் 26ம் தேதி வரையிலான காலத்தில், 5.58 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதியாகியுள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டின் இதே காலத்தில், 9.34 லட்சம் டன்னாகவும், அதற்கு முந்தைய ஆண்டில், 11.21 லட்சம் டன்னாகவும் அதிகரித்து காணப்பட்டது. உள்நாட்டில், சில்லறை விற்பனையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 25 ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது. இதன் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே, மத்திய அரசு கடந்த 9ம் தேதி வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.