தனித்து போட்டியிடுவதால் சொந்தக் காலில் நிற்கிறோம்: இளங்கோவன்

posted in: தமிழ்நாடு | 0

ஈரோடு: “”தனித்துப் போட்டியிடுவதால், காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். சொந்தக்காலில் நிற்கிறோம்; சுய மரியாதையைக் காத்துக் கொண்டுள்ளோம்,” என, முன்னாள் மத்தியமைச்சர் இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி: உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகமான அதிகாரம் அளிக்க வேண்டும். தூய்மையான நிர்வாகம் தர வேண்டும் என்ற கொள்கையுடன் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். தனித்துப் போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பு நன்றாகவே உள்ளது. தனித்துப் போட்டியிடுவதால், கட்சியினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். இதன்மூலம் சொந்தக்காலில் நிற்கிறோம்; சுய மரியாதையைக் காத்துக் கொண்டுள்ளோம். ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்தியமைச்சர் வாசன் மற்றும் கட்சியின் முன்னணித் தலைவர்கள் வரவுள்ளனர்.கம்யூனிஸ்ட் கட்சிகள் தனியாக போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூட டிபாஸிட் வாங்க முடியாது என்பதால், தே.மு.தி.க.,வுடன் சேர்ந்துள்ளனர். தே.மு.தி.க., எங்களோடு வரவில்லையென வருத்தம் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சி தவிர மற்ற அனைத்து கட்சிகளும் கூட்டணியோடு தான் போட்டியிடுகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் மீதான பிரச்னை, வேண்டுமென்றே எதிர்கட்சிகளால் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க திட்டமிடப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி, ராஜா உள்பட யாரையும் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை.

தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசுவதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள கூடாது. நாள்தோறும் அவருக்கு ஏதாவது ஒரு பிரச்னை வருவதால், எதை பேசுகிறோம் என, அவருக்கே தெரிவதில்லை. அதனால், அவர் கூறுவதெற்கெல்லாம் பதிலளிக்கத் தேவையில்லை. திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸார் மனசாட்சியுடன் நடந்துகொள்வோம். உள்ளாட்சித் தேர்தலில் எங்களது உண்மையான பலம் தெரியுமென்பதை விட; எங்களுக்கு மக்கள் ஆதரவு எப்படியுள்ளது என்பதை அறிவோம். அதற்கேற்ப எங்கள் பணிகளை மாற்றியமைப்போம். உள்ளாட்சித் தேர்தலில், 10 ஆண்டுகளாகத் தான் ஆளுங்கட்சியினரே வெற்றிபெறுவர் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இம்முறை மாநிலத் தேர்தல் கமிஷனர் அய்யர் மற்றும் அ.தி.மு.க., அரசு தேர்தல் நடுநிலையோடு நடத்தப்படுமென அறிவித்துள்ளது. இதை நாங்கள் நம்புகிறோம்.

காங்கிரஸ் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், தேர்தல் என வந்துவிட்டால், அனைவருக்கும் ஒரே கருத்து தான்; அது காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும் என்பதாகும். மூன்று பேரின் தூக்கு தண்டனையை விவகாரத்தில் என்னுடன் விவாதிக்க வருமாறு கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தேன். அவருடன் விவாதிக்கும் அளவுக்கு எனக்கு தகுதியில்லையென அவர் கருதினால், அவரது வாரிசுகளில் யாரையாவது அனுப்ப கூறினேன். ஆனால், இதுவரை அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. எனக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லையென்று தான் எடுத்துக்கொள்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.