கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்திற்கு சுயநல கும்பலே காரணம்

posted in: தமிழ்நாடு | 0

சுயநல நோக்கம் கொண்டவர்கள் சேர்ந்த குழுக்களால், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, தவறான தகவல்கள் பரப்பப்பட்டு போராட்டம் நடந்தது,” என, இந்திய அணுமின் கழகம் அறிவித்துள்ளது.

கூடங்குளம் குறித்து, இந்திய அணுமின் கழகத்தின் செயல் இயக்குனர் நளினிஷ் நகைக் வெளியிட்ட விளக்கத்தின் முக்கிய அம்சங்கள்:
* கூடங்குளம் அணுமின் நிலையம், இயற்கை பேரிடர், நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி, ராட்சத அலைகள், அணைகள் உடைதல் உள்ளிட்ட சம்பவங்களை, அபாய சேதம் இல்லாமல் சமாளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
* அணுமின் கழக இடத்தேர்வு கமிட்டி, அறிவியல் பூர்வ ஆய்வு நடத்திய பின் தான் கூடங்குளம் தேர்வானது.
* அணுமின் நிலையத்தைச் சுற்றி, 1.5 கி.மீ., தூரம் கட்டுப்பாட்டு பகுதியும், 5 கி.மீ., தூரம் பாதுகாக்கப்படும் பகுதியும் அமையும்.
* காற்று ஊடுருவல் மூலமான, அதிக வெப்பம் உமிழாத தொழில்நுட்பத்தில் கூடங்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, கொதிகலனை குளிர்விக்க கடல்நீர் பயன்படுத்தப்பட்டு, கடலிலேயே உமிழப்படுகிறது.
* பயன்படுத்தப்பட்ட நீர் வெளியேறும் போது, 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தான் இருக்கும். இது மிகக்குறைந்த வெப்பநிலை; சாதாரண நீரின் தட்பநிலையை விட குறைந்தது. இதனால் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
* மகாராஷ்டிரா தாராப்பூர் அணு நிலையம், சென்னை கல்பாக்கம் அணு நிலையம் உள்ளிட்டவை, கடல்பகுதியில் உள்ளன. இந்த நிலையங்களால், கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
* இந்திய அணுமின் நிலையங்களை அமைக்கும் முன், அப்பகுதியிலிருந்து, 30 கி.மீ., சுற்றளவிற்கு, சுற்றுச்சூழல் ஆய்வு செய்யப்படும். அணுமின் நிலையம் இயக்கத்திற்கு பின், மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில், கடந்த, 40 ஆண்டுகளில், இந்தியாவில், எந்த அணு மின்நிலைய பகுதியிலும் கதிர்வீச்சு அபாயம் இல்லை.
* கூடங்குளம் அணு உலை கனநீரை பயன்படுத்தும், வி.வி.இ.ஆர்., ரக அணு உலை, கடந்த, 25 ஆண்டுகளில், இந்தியாவில், 15 உலைகள் இதே தொழில்நுட்பத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நளினிஷ் நகைக் தெரிவித்துள்ளார்.
* கூடங்குளம் நிலைய பகுதி, நிலநடுக்கம் ஏற்பட மிகக்குறைந்த வாய்ப்புள்ள இரண்டாவது மண்டலத்தில் உள்ளது.
* கூடங்குளத்திலிருந்து, 88 கி.மீ., தூரமுள்ள திருவனந்தபுரத்தில், 4.3 ரிக்டர் அளவுக்கு, இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. கூடங்குளம் நிலைய கட்டடங்கள், 6 ரிக்டர் அளவை கூட தாக்குப்பிடிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
* சுனாமி ஏற்படும் பகுதியிலிருந்து, 1,500 கி.மீ., தூரத்தில் கூடங்குளம் அமைந்துள்ளது. ஆனால், ஜப்பானில் புகுஷிமா அணுஉலை, சுனாமி ஏற்படும் மையத்திலிருந்து, 130 கி.மீ., தூரத்தில் அமைந்திருந்ததால் தான், அங்கு பாதிப்பு ஏற்பட்டது.
* கடந்த, 2004, டிசம்பர் 26ல், 9.2 ரிக்டர் அளவு நில நடுக்கமும், சுனாமி பேரலையும் ஏற்பட்ட போது, கூடங்குளம் அணு உலை பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
* 2.2 மீட்டர் அளவு கடல் மட்டம் உயர்ந்தது. ஆனால், கூடங்குளம் நிலையம், இதையும் சமாளிக்கும் வகையில், கடல் மட்டத்திலிருந்து, 8.7 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த விதத்திலும் கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்புக்கு ஆபத்து இல்லை.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.