அ.தி.மு.க.வுடன் நடந்த பேச்சில் பலன் இல்லை: தே.மு.தி.க – மார்க்சிஸ்ட் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட முடிவு; தா.பாண்டியன் பேட்டி

posted in: தமிழ்நாடு | 0

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ.பத்மாவதி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் தா.பாண்டியன், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத்தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநில துணைச் செயலாளர்கள் சி.மகேந்திரன், கோ.பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஊழல் கட்சிகளான காங்கிரஸ், திமுக கூட்டணியை முறியடிக்க இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி ஒரு நிலையான முடிவை எடுத்து அதற்கான கூட்டணியை ஏற்படுத்தி கூட்டணியிலும் வெற்றி கண்டது.

மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பதற்கான அரசியல் கடமையையும் நிறைவேற்றியது. அதிமுக ஆட்சி ஏற்பட்டு, அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளில் அரசியல் ரீதியான எந்தவித முரண்பாடுகளும் எங்களுக்கு ஏற்படவில்லை. எங்களின் அரசியல் கடமையை நிறைவேற்றும் விதமாக உள்ளாட்சித் தேர்தலிலும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அதன் முதல் முயற்சியாக சட்டமன்றத் தேர்தலில் அமைந்த அதே கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர வேண்டும் என்று முயற்சி எடுத்தோம். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. தமிழ்நாட்டில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணியினர் மற்றும் இதர ஜனநாயக சக்திகளுடன் தொகுதி உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.

தற்போது வெளியிடப்படும் தொகுதிகள் அத்தகைய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மாறுதலுக்குட்பட்டது என்பதையும் தெரிவிக்கிறோம். அதன் அடிப்படையில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி திருப்பூர், திருநெல்வேலி ஆகிய இரண்டு மாநகராட்சிகளில் மேயர் பதவிக்குப் போட்டியிட முடிவு செய்துள்ளது.

அதன்படி திருப்பூர் மாநகராட்சிக்கு திருப்பூர் மாவட்டச் செயலாளர் ரவி என்ற சுப்பிரமணியன் மேயர் வேட்பாளராக போட்டியிடுகிறார். திருநெல்வேலி மாநகராட்சிக்கு போட்டியிடும் வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார். மேலும் 18 நகராட்சிகளில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது.

இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *