9 மாநகராட்சிகளில் ஜெயலலிதா பிரசாரம்; அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்

posted in: தமிழ்நாடு | 0

தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 401 உள்ளாட்சிப் பதவி இடங்கள் உள்ளன.

இந்த பதவி இடங்களில் இருப்பவர்களின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் (அக்டோபர்) 24-ந் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் 17 மற்றும் 19-ந் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது.

நாளை (வியாழன்) வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதனால் மனு தாக்கல் விறு விறுப்பாக நடந்து வருகிறது. முதலில் மனு தாக்கல் மிகவும் மந்தமாக இருந்தது. முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த பிறகே, மனு தாக்கலில் சூடு பிடித்தது. நேற்று மாலை வரை 2 லட்சத்து 19 ஆயிரத்து 391 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்றும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மனு செய்தனர். காங்கிரஸ் உள்பட சில கட்சிகளின் வேட்பாளர்கள் நாளை தான் மனு செய்ய உள்ளனர்.
3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுக்கள் நாளை மறு நாள் (30-ந்தேதி)
பரிசீலனை செய்யப்படும்.

தகுதி இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெற விரும்புபவர்கள் அக்டோபர் 3-ந் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும்.
3-ந் தேதி மாலை ஒவ்வொரு உள்ளாட்சி பதவிக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு பிரசாரம் சூடு பிடிக்கும்.

தமிழக அரசியலில் இது வரை இல்லாதபடி முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதனால் தேர்தலில் பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. 9 மாநகராட்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வேட்பாளர்கள் பிரசாரத்தைத் தொடங்கி விட்டனர். அடுத்த வாரம் பிரசாரம் விறு விறுப்படையும். வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்ட தொடங்கும் போது பிரசாரம் உச்சக்கட்டமாக இருக்கும்.

இது தவிர முக்கிய கட்சிகளின் தலைவர்களும் சூறாவளி பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா அக்டோபர் இரண்டாவது வாரம் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார். 9 மாநகராட்சிகளிலும் அவர் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவார். தி.மு.க. தலைவர் கருணாநிதி அக்டோபர் 2-வது வாரம் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. தலைவர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

பா.ஜ.க., காங்கிரஸ், இடது சாரி கட்சித் தலைவர்களும் சூறாவளி பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். சிறிய கட்சிகளும் ஆதரவு திரட்டும் பணியை தீவிரமாக செய்து வருகின்றன. எனவே இன்னும் ஒரு வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும். இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலை சுமூகமாக நடத்தி முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் விரிவாக செய்துள்ளது.

ஓட்டுச் சாவடி பணியாளர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களும் ஒவ்வொரு தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சித் தேர்தலுக்கு சுமார் 12 ஆயிரம் மின்னணு வாக்கு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. கிராமப் பகுதிகளில் உள்ள வர்கள் 4 ஓட்டுக்களும், நகர்ப் பகுதிகளில் உள்ளவர்கள் 2 ஓட்டுக்களும் போட வேண்டும் என்பதால் அதற்கு ஏற்ப வாக்குச் சாவடிகள், ஓட்டுப் பெட்டிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. முக்கிய நகரங்களில் ரோந்து பணிக்கு துணை நிலை ராணுவம் வரவழைக்கப்பட உள்ளது. ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 21-ந் தேதி நடை பெறும். அதற்கும் பலத்த பாதுகாப்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *