தே.மு.தி.க, மார்க்சிஸ்ட் கூட்டணி: விஜயகாந்த் பரபரப்பு பேட்டி

posted in: தமிழ்நாடு | 0

உள்ளாட்சித் தோ்தலில் தே.மு.தி.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 மாநகராட்சி, 25 நகராட்சி, 61 பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தேமுதிக-மார்க்சிஸ்ட் கட்சிகள் இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க – மார்க்சிஸ்ட் கட்சிகள் சேர்ந்து போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரு கட்சிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து கோவை மற்றும் வேலூர் மாநகராட்சிகளில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

கோவில்பட்டி, பழநி, சிதம்பரம், கடலூர், ஜெயங்கொண்டம், சிவகங்கை, அனகாபுத்தூர், குழித்துறை, குளச்சல், கம்பம், பெரியகுளம், புதுக்கோட்டை உட்பட மொத்தம் 25 நகராட்சிகள் மார்க்சிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவைகுண்டம், எட்டயபுரம், மானாமதுரை, கிள்ளியூர், திருப்புவனம், படைவீடு, குறிஞ்சிபாடி, உளுந்தூர்பேட்டை, செட்டிப்பாளையம் உட்பட 61 பேரூராட்சிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பத்தரிக்கையாளர்களிடம் கூறியதாவது: தே.மு.தி.க.வுடன் மார்க்சிஸ்ட் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அவர்களுக்கான உள்ளாட்சி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் உள்பட வேறு சில கட்சிகள் வந்தாலும் ஏற்போம். தே.மு.தி.க தலைமையில் 3வது கூட்டணி அமைந்துள்ளது நல்ல செய்தி.

மார்க்சிஸ்ட் கட்சியுடன் சுமூகமான உறவு ஏற்பட்டுள்ளதால் இரு கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் பழக்கம் ஏற்பட்டு கூட்டணி பலம் பெறும். திருச்சி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை பின்னர் தெரிவிப்போம்.

இப்போது உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகரில் இன்று மாலையே தொடங்குகிறேன். மயிலையில் பொதுக் கூட்டமும் நடக்கவுள்ளது.

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறதா என்பது அவர்கள் செயல்படும் போது தான் சொல்ல முடியும். அ.தி.மு.க தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதற்கு நான் தேர்தல் பிரசாரத்தில் பதில் அளிப்பேன்.

source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *