மிச்செலின் இந்தியா நிறுவனம் : சென்னை ஆலையில் 2012ம் ஆண்டில் உற்பத்தி தொடங்கும்

posted in: வர்த்தகம் | 0

மும்பை : பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, மிச்செலின் நிறுவனத்தின் துணை நிறுவனம் மிச்செலின் இந்தியா.

இந்நிறுவனம், தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில், 4,000 கோடி ரூபாய் திட்டச் செலவில், மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இங்கு, பல்வேறு வகையான டயர்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கனரக வாகனங்களுக்கான டயர் உற்பத்தி, வரும் 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடங்கும் என, இந்நிறுவனத்தின் தேசிய விற்பனை மேலாளர் (டிரக் மற்றும் பஸ் பிரிவு) பீ.கே.குமார் தெரிவித்தார். மிச்செலின் நிறுவனத்திற்கு, இந்தியாவில் இதுதான் முதல் தொழிற்சாலை. நிறுவனத்தின் தொழிற்சாலை முழு அளவில் செயல்படத் தொடங்கும் போது, இதன் ஆண்டு உற்பத்தித்திறன், 2 கோடி டயர்கள் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிச்செலின் இந்தியா நிறுவனம், கடந்த 2009ம் ஆண்டு தமிழக அரசுடன், இங்கு தொழிற்சாலை அமைக்கும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. முதல் கட்டமாக, 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனத் தெரிகிறது. இதுவரை, 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டிரக் மற்றும் பஸ் டயர்கள் தயாரிப்பு தொடங்கும் நிலையில், கூடுதலாக பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என, குமார் கூறினார். நடப்பு 2011ல், உள்நாட்டில் பஸ், டிரக் மற்றும் இலகு ரக வர்த்தக வாகனங்களுக்கான டயர் (ரேடியல் மற்றும் நைலான் வகை இணைந்து) தேவை, 1.21 கோடி என்றளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, வரும் 2012ல், 1.26 கோடி என்றளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டில், இவ்வகை டயர்களுக்கான தேவை, 1.18 கோடி என்றளவில் இருந்தது. இந்திய மோட்டார் வாகன டயர்கள் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், கடந்த 2010-11ம் நிதியாண்டில், கனரக வாகனங்கள் மற்றும் பஸ் டயர்களுக்கான சந்தை மதிப்பு அளவின் அடிப்படையில், 1.56 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்தது. இப்பிரிவில், அப்போலோ டயர்ஸ், எம்.ஆர்.எப்., சீயட் டயர்ஸ் மற்றும் ஜே.கே.டயர்ஸ் ஆகிய நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, மொத்த டயர்களுக்கான சந்தையில், ரேடியல் டயர்களின் சந்தை பங்களிப்பு, 14.5 சதவீதம் என்றளவில் உள்ளது. இது, வரும் 2020ல், 50 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.