தங்கத்தில் முதலீடு செய்வது ஆதாயம் அளிக்குமா?

posted in: வர்த்தகம் | 0

சென்னை : கடந்த ஒரு சில மாதங்களாக, தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.


அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பல நாடுகளின் செலாவணிக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து போனது. மேலும், கச்சா எண்ணெய் விலையும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இது போன்ற காரணங்களால், தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு உலகளவில் அதிகரித்து வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்யலாமா? : தங்க ஆபரணங்கள், தங்கத்தில் முதலீடு செய்யக்கூடிய பரஸ்பர நிதி நிறுவனங்களின் கோல்டு ஈ.டி.எப். திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். கடந்த மூன்று ஆண்டுகளில் “கோல்டு ஈ.டி.எப்’ திட்டங்களில் செய்த முதலீடு, ஆண்டுக்கணக்கில் 30 சதவீத வருவாயை வழங்கியுள்ளது. தனி நபர் கடனுக்கான வட்டி 15-16 சதவீதமாக இருக்கும் பட்சத்தில், “கோல்ட் ஈ.டி.எப்’ திட்டங்கள் நிச்சயம் லாபகரமானவை தான். அதுபோன்று இந்நிறுவனங்களின் “ஈ-கோல்டு’ திட்டங்களும் அதிக வருவாய் வழங்கக் கூடியவை. இவற்றில் மாதம் 1,000 ரூபாய் என்ற அளவில் கூட முதலீடு செய்யலாம். “ஈ-கோல்டு’ – “கோல்டு ஈ.டி.எப்’ இவற்றில் எது சிறந்த முதலீடு? : இரண்டுமே சிறந்த முதலீடுதான். இரண்டிலும் சாதக, பாதக அம்சங்கள் உள்ளன. அதனால், இது, முழுக்க முழுக்க ஒருவரது முதலீடு, முதலீட்டு காலம் உள்ளிட்டவற்றை பொறுத்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நடப்பு ஆகஸ்ட் மாதம் வரை “ஈ-கோல்டு’ திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 42 சதவீத வருவாயை வழங்கியுள்ளது. அதே சமயம், “கோல்டு ஈ.டி.எப்’ முதலீட்டின் மீதான வருவாய் 2 சதவீதம் குறைந்து 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. “ஈ-கோல்டு’-ல் நிர்வாக செலவு பிடித்தம் செய்யப்படுவதில்லை என்பதால், நீண்ட கால அடிப்படையில் இத்திட்டத்தில் முதலீடு மேற்கொள்ளலாம். ஒரு முறை பரிவர்த்தனைக் கட்டணமாக, ஒரு கிராமுக்கு 2-3 பைசாவும், தரகு கட்டணமாக 0.2-0.3 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் “கோல்டு ஈ.டி.எப்’ திட்டங்களில், இதை விட கூடுதல் செலவாகும். “ஈ-கோல்டு’ -ல் மேற்கொள்ளப்படும் முதலீடு ஆவண வடிவில் உள்ளபோதிலும், அதை தங்கமாகவும் வாங்கிக் கொள்ளலாம்.இத்திட்டத்தின் மூலம், 8 கிராம் தங்கம் கூட வாங்க முடியும். ஆனால் “கோல்டு ஈ.டி.எப்’ திட்டத்தில், ஒரு கிராம் (யூனிட்) என்ற அளவிற்கு கூட முதலீடு மேற்கொண்டாலும், தங்கமாக வாங்கும் போது, குறைந்தபட்சம் ஒரு கிலோ என்ற அளவில் தான் வாங்க முடியும். மேலும், இத்தங்கத்தை மும்பையில் மட்டுமே வாங்கும் வசதி தற்போது உள்ளது. ஆனால்,”ஈ-கோல்டு’ முதலீட்டாளர்கள், என்.எஸ்.ஈ.எல் நிறுவனத்தின் 15 நகரங்களில் உள்ள பிரத்யேக மையங்களில் தங்கம் வாங்கலாம். மேலும், குறிப்பிட்ட நகைக் கடைகளில், தங்க ஆபரணங்களாகவும் வாங்கிக் கொள்ளலாம்.செய்கூலி மட்டும் செலுத்தினால் போதும். இவ்வகை திட்டத்தில் முதலீடு செய்வதும்,திரும்பப் பெறுவதிலும் உள்ள செலவினம் 10-15 காசுகள் என்று வைத்துக் கொண்டால், “கோல்டு ஈ.டி.எப்’ முதலீட்டில் இது 4-5 ரூபாய் என்ற அளவில் இருக்கும். எனினும், “ஈ-கோல்டு’ திட்டத்தில் தங்க ஆபரணங்களாக வாங்கும் போது, மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்) செலுத்த வேண்டும். சில்லறை முதலீட்டாளர்கள் “ஈ-கோல்டு’ திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்தது. அதே சமயம், வரி ஆதாயத்தை கணக்கில் கொண்டால், “கோல்டு ஈ.டி.எப்’ திட்டம் சிறந்தது எனலாம். “ஈ-கோல்டு’ திட்டத்தில், முதலீட்டு ஆதாய காலம் மூன்றாண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, இத்திட்டத்தில், மூன்றாண்டுகளுக்குள்ளாக முதலீட்டை திரும்பப் பெற்றால், மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். ஆனால் “கோல்டு ஈ.டி.எப்’ திட்டத்தில், இது ஓராண்டு காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஓராண்டிற்குள் முதலீட்டை திரும்பப் பெற்றால் குறுகிய கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். இத்திட்டத்தில், நீண்ட கால முதலீட்டு ஆதாய வரி 10 சதவீதமாக உள்ளது. ஆனால்,”ஈ-கோல்டு’ திட்டத்தில் இது, 20 சதவீதம் என்ற அளவில் அதிகமாக உள்ளது. மேலும், “ஈ-கோல்டு’ திட்ட முதலீட்டிற்கு செல்வ வரி உண்டு. “கோல்டு ஈ.டி.எப்’ திட்ட முதலீட்டிற்கு இவ்வரி இல்லை. “ஈ-கோல்டு’ திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பாக என்.எஸ்.ஈ.எல் நிறுவனத்தில், “டீமேட்’ எனப்படும் மின்னணு கணக்கு தொடங்க வேண்டும். ஆனால் “கோல்டு ஈ.டி.எப்’ திட்டங்களில் முதலீடு செய்வதற்கு, பங்கு முதலீட்டிற்கான “டீமேட்’ கணக்கையே பயன்படுத்தலாம். தனியாக கணக்கு தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.