கடந்த 38 மாதங்களில் இல்லாத அளவிற்குபரஸ்பர நிதியங்களின் பங்கு முதலீடு அதிகரிப்பு

posted in: வர்த்தகம் | 0

மும்பை:சென்ற ஆகஸ்ட் மாதம், இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள், 2 ஆயிரத்து 524 கோடி ரூபாய்அளவிற்கு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளன.

இது, கடந்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட அதிகபட்சமுதலீடாகும்.இந்திய பங்குச்சந்தை, இவ்வாண்டு தொடக்கம் முதல் இறங்கு முகமாக உள்ளது. இதனால், பல முன்னணி நிறுவனப் பங்குகள் விலை, கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், பங்குச் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளது.

ஆனால், இந்த சாதகமான நிலையை பயன்படுத்தி, பரஸ்பர நிதி நிறுவனங்கள், அதிகளவில் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றன.சிறந்த நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலைக்கு கிடைப்பதாலும், பொருளாதார மந்த நிலையில் இருந்து நாடு விரைவில் மீளும் என்ற நம்பிக்கையாலும், பரஸ்பர நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு அதிகரித்து வருகிறது.

இது குறித்து மார்னிங் ஸ்டார் ரீசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சென்ற ஆகஸ்ட் மாதம் இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள், பங்குகளில் 2 ஆயிரத்து 524 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம், இந்நிறுவனங்கள் பங்குகளில் மேற்கொண்ட நிகர முதலீடு 3 ஆயிரத்து 179கோடி ரூபாய் அளவிற்கு இருந்தது.

கடந்த மூன்றாண்டுகளில் இது தான் மிக அதிகளவிலான முதலீடாக கருதப்படுகிறது. இதையடுத்து, சென்ற ஆகஸ்ட் மாதம் இந்நிறுவனங்கள் அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.அதே சமயம், பரஸ்பர நிதி நிறுவனங்களின் மாதந்திர வருவாய், நடப்பாண்டு ஜனவரி முதல் சரிவடைந்து வருகிறது. பெரிய நிறுவனப் பங்குகளை விட, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளின் விலை கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது.சென்ற ஆகஸ்ட் மாதம், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ 8.4சதவீதம்சரிவடைந்துள்ளது.

அதேசமயம், நடுத்தர நிறுவனங்களுக்கான ‘பீ.எஸ்.இ. மிட்கேப்’ குறியீட்டு எண் 9.3 சதவீதமும், சிறிய நிறுவனங்களுக்கான ‘ பீ.எஸ்.இ. ஸ்மால் கேப்’ குறியீட்டு எண் 14.1 சதவீதமும் குறைந்துள்ளது.அதே சமயம், பெரிய நிறுவனப் பங்குகள் மீதான வருவாய், 7.8 சதவீத எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளன. அதாவது, வருவாய்வீழ்ச்சி கண்டுள்ளது. சிறியமற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகள் மீதான வருவாயின் எதிர்மறை வளர்ச்சி, 7.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

சென்ற ஜனவரி மாதத்தில் இந்த இரு பிரிவுகளின் மீதான வருவாயின் எதிர்மறை வளர்ச்சி, முறையே 9.7 மற்றும் 10.5சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.ஆகஸ்ட் மாதம், வங்கி மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை நிறுவனப் பங்குகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்தன. இப்பிரிவு நிறுவனப் பங்குகள் விலை 12 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்தன. சர்வதேசபொருளாதார மந்த நிலையால், தொழில்நுட்ப துறை நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி கண்டுள்ளன. உள்நாட்டில் பணவீக்கம், வங்கிகளின் வட்டி உயரும் என்ற அச்சப்பாடு காரணமாக வங்கிப் பங்குகள் விலை சரிவடைந்துள்ளன என, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சிறந்த செயல்பாட்டைக் கண்டு வரும் நிறுவனங்களில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம். அதனால், பரஸ்பர நிதி நிறுவனங்கள் அதிக அளவில், பங்குகளில் முதலீடு செயய்து வருகின்றன’ என்று தைவா அசெட் மானேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமை முதலீட்டுஅதிகாரி என்.சேதுராம் தெரிவித்தார்.சர்வதேச நெருக்கடியால், பரஸ்பர நிதி நிறுவனங்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்துள்ளன. இதனால், இந்நிறுவனங்களிடம் ரொக்க கையிருப்பு அதிகம் உள்ளது.

இந்த கையிருப்பைக் கொண்டு, குறைந்த விலையிலான பங்குகளில் அவை முதலீடு செய்து வருகின்றன.உதாரணமாக, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்களின் ரொக்க கையிருப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்து இருந்தது. இந்நிறுவனங்களிடம் 3 -5 சதவீதம் என்ற அளவில் ரொக்க கையிருப்பு இருப்பது வழக்கம்.

இது, ஒரு சில நிறுவனங்களிடம் 10 சதவீத அளவிற்கு உள்ளது.சென்ற ஆகஸ்ட் மாதம், பரஸ்பர நிதி நிறுவனங்களின், பங்குகளில் முதலீடு செய்யக் கூடிய திட்டங்களின் வருவாய்குறைந்துள்ள போதிலும், அவை, இத்தகைய பங்குகளின் குறியீட்டு எண்சரிவை விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.அதேசமயம், ஆகஸ்ட் மாதம், கோல்டு ஈ.டி.எப் திட்டங்கள் மிகச் சிறந்த வருவாயை அளித்துள்ளன. இப்பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, வேறு எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு 15.2 சதவீத வருவாயை முதலீட்டாளர்களுக்கு ஈட்டித் தந்துள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.