அமெரிக்க பங்குச் சந்தைகளால் ‘சென்செக்ஸ்’ 108 புள்ளிகள் சரிவு

posted in: வர்த்தகம் | 0

மும்பை : நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான நேற்று, சற்று சுணக்கமாக இருந்தது.

சென்ற ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்காவில், புதிதாக வேலை வாய்ப்பு எதுவும் உருவாகவில்லை என்ற செய்தியால், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

இந்நிலையில், சென்ற வாரம் மூன்று நாட்கள் நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இதை சாதகமாக பயன்படுத்தி, லாப நோக்கம் கருதி பலர் பங்குகளை விற்பனை செய்ததும், வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், நாட்டின் பணவீக்கம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில், வங்கிகளுக்கான வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்படலாம் என்ற அச்சத்தால், வங்கி துறை பங்குகளின் விலையும் குறைந்து போனது. இதுதவிர, எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 108.13 புள்ளிகள் சரிவடைந்து, 16,713.33 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,760.07 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,561.46 புள்ளிகள் வரையிலும் சென்றது. ‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 10 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 20 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிப்டி’ 22.80 புள்ளிகள் குறைந்து, 5,017.20 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,030.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,964.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Source  &  Thanks :  dinamalar


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *