தனியார் துறையினர் வங்கி தொடங்க உரிமம்: ரிசர்வ் வங்கியின் புதிய நெறிமுறை

posted in: வர்த்தகம் | 0

புதுடில்லி: தனியார் துறையினர், புதிதாக வங்கி தொடங்குவதற்கு உரிமம் அளிப்பதற்கான வரைவு திட்டத்தை ரிசர்வ் வங்கி திங்களன்று வெளியிட்டது.

இதில், தனியார் துறையினர், வங்கி தொடங்க, குறைந்தபட்சம் 500 கோடி ரூபாய் மூலதனம் தேவை என்பது உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. தனியார் துறையினர் புதிதாக வங்கி தொடங்குவதற்கு, உரிமம் அளிக்க வேண்டும் என பல பெரிய குழும நிறுவனங்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று தனியார் வங்கிகள் தொடங்குவதற்கான நெறிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : தனியார் துறையினர், புதிதாக வங்கி தொடங்குவதற்கு, குறைந்தபட்சம் 500 கோடி ரூபாய் மூலதனம் இட வேண்டும். வங்கியின் நிறுவனர்களையும், செயல்படுத்தும் திட்டங்களையும் பொறுத்து முதலீடு மேற்கொள்ளலாம். பெரிய குழுமங்களைக் கொண்ட, பல துறைகளில், கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்களை நிர்வகித்து வரும் உள்நாட்டினர், வங்கி தொடங்க தகுதியுடையவர் ஆவர்.எனினும் ரியல் எஸ்டேட், கட்டுமானம், தரகு சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குழுமங்கள், நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க அனுமதி இல்லை.ரிசர்வ் வங்கியில், வங்கி சாரா நிதி நிறுவனப் பிரிவில் பதிவு செய்துள்ள ஒரு நிறுவனத்தின் கீழ் மட்டுமே வங்கி தொடங்க அனுமதி வழங்கப்படும். வங்கியின் அளிக்கப்பட்ட மூலதனத்தில், குறைந்தபட்சம் 40 சதவீதம் இந்நிறுவனம் வசம் இருக்க வேண்டும். வங்கிக்கு உரிமம் வழங்கப்பட்ட முதல் 5 ஆண்டுகள் வரை, இந்த மூலதனம், குறிப்பிட்ட நிறுவனத்தில் இருக்க வேண்டும். புதிதாக தொடங்கப்படும் வங்கியில், 50 சதவீத ”யேட்சை இயக்குனர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.புதிய வங்கி, தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள், அதன் பங்குகளை பங்குச் சந்தைகளில் பட்டியலிட வேண்டும். தனியார் வங்கிகளில், அன்னிய முதலீட்டு வரம்பு முதல் 5 ஆண்டுகளுக்கு, 49 சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும்.புதிய தனியார் வங்கி, அதன் மொத்த கிளைகளில் 25 சதவீத கிளைகளை வங்கிகள் இல்லாத கிராமப்புறங்களில் திறக்க வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *