சென்னையில் அரசு நேரடி காய்கறி விற்பனை அங்காடி:ரூ.17 கோடியில் திட்டம் அமல்

posted in: வர்த்தகம் | 0

சென்னை : சென்னையில் அரசு காய்கறி விற்பனை அங்காடி அமைக்க முதல்கட்டமாக 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி, கோவை, மதுரை போன்ற நகரங்களுக்கும், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.


சென்னை உட்பட திருச்சி, கோவை, மதுரை போன்ற நகரங்களில் அரசு சார்பில் நேரடி காய்கறி விற்பனை மையங்களை அமைத்து, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அனைத்து வகையான காய்கறிகளையும் கொடுக்கும் திட்டத்தை சமீபத்தில் அரசு அறிவித்தது. சென்னை நகரில் வசிக்கும் பொதுமக்களுக்கு தினமும் 10 ஆயிரம் டன் காய்கறிகள் தேவைப்படும் என, விவசாயத்துறை அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். அந்தளவிற்கான காய்கறிகளை நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அரசிடம் இல்லை.

சென்னை நகரின் காய்கறித் தேவையை பெருமளவில் தீர்த்து வைப்பதில், கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகளின் பங்கு முக்கியமானது. ஆரம்ப நிலையில், கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளிடம் மொத்த விலையில் காய்கறிகளை வாங்கி, மார்க்கெட் விலையை விட 2, 3 ரூபாய் குறைத்து விற்க அரசு திட்டமிட்டுள்ளது.

உற்பத்தியாகும் விவசாய விளைபொருட்களில், 30 சதவீதம் விற்பனையாகாமல் தேக்கமடைந்து, அழுகி வீணாகிறது. இந்த 30 சதவீதம் பொருட்களின் விலையையும் சேர்த்தே, பொதுமக்களின் தலையில் கட்டப்படுகிறது. ரிலையன்ஸ் காய்கறி விற்பனை மையத்தை போன்று, அரசு காய்கறி விற்பனை மையமும் நட்சத்திர ஓட்டல் தரத்தில் அமைக்கவும், விற்பனையாகாமல் மீதமாகும் காய்கறிகள் மற்றும் பழங்களை குப்பையில் கொட்டாமல், குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைத்து, மீண்டும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட உள்ளது. மீதமாகும் தக்காளி போன்றவற்றைக் கொண்டு ஜூஸ், சிப்ஸ், ஜாம் போன்ற பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அமைக்கும் வாய்ப்பும், இத்திட்டத்தால் பிரகாசமடைந்துள்ளது.

இது குறித்து விவசாயத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: டில்லி, மும்பை, கோல்கட்டா, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில், அரசின் நேரடி காய்கறி விற்பனை மையத்தை துவக்க மத்திய அரசு, கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது. சென்னைக்கு மட்டுமின்றி அத்திட்டத்தை தமிழகத்தில் உள்ள பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்த முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார். விவசாய பொருட்களின் விலையேற்றத்திற்கும், விவசாயிகளுக்கும் சம்பந்தமே கிடையாது. உதாரணத்திற்கு, திருவள்ளூரில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில் வெள்ளை பூசணிக்காய் ஒன்று 10 ரூபாய்க்கும் குறைவாக கொள்முதல் செய்யும் வியாபாரி, அதை வாகனத்தில் ஏற்றி மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து ஒரு பூசணிக்காய் 30 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கிறார். இந்த 20 ரூபாய் விலையேற்றத்தால் மக்கள் பாதிப்படைகின்றனர்.

வியாபாரிகள் அதிகளவில் பணத்தை கடனாக விவசாயிகளுக்கு கொடுத்திருக்கின்றனர். அதனால், அரசு அதிகாரிகள் நேரடியாக சென்று விவசாயிகளிடம் விளைபொருட்களை வாங்கி விட முடியாது. அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தை செயல்படுத்த, பசுமைக் குடில்கள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அதுவரை, கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளிடம், காய்கறிகளை மொத்த விலையில் வாங்கி, சில்லறை விலையில் பொதுமக்களுக்கு கொடுக்கவுள்ளோம். விவசாயிகள் விளைவிக்கும் பொருள், நேரடியாக கொள்முதல் செய்து அரசு காய்கறி விற்பனை மையத்திற்கு வரும்போது தான், இத்திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றதாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

திருவள்ளூரில் கேரட் விளையும்

தமிழகத்தில் குறிப்பிட்ட சீசனில் குறிப்பிட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. அதற்கு, சீதோஷ்ண நிலை மற்றும் மழைப்பொழிவு காரணமாக அமைகின்றன. ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை மற்றும் குறைந்த தண்ணீரில், காய்கறிகளை விளைவிக்க ‘பசுமைக் குடில்’ என்ற அரசு திட்டம் உள்ளது.அத்திட்டத்தின் படி, பசுமைக் குடில் அமைக்க 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு 3.25 லட்சம் ரூபாயும், பெரிய விவசாயிகளுக்கு 2.15 லட்சம் ரூபாயும், அரசு மானியமாக தருகிறது.பசுமைக் குடில் அமைத்து விவசாயம் செய்தால், சமையலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் கேரட், தக்காளி மற்றும் பல்வேறு வகையான காய்கறிகளை ‘சீசன்’ என்றில்லாமல், ஆண்டு முழுவதும் விளைவிக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் பரவலாக, பசுமைக் குடில் திட்டத்திற்கு விவசாயிகள் மாறினால், உற்பத்தி பல மடங்கு பெருகும்.தேவைக்கு அதிகமாக விளைந்த பொருட்களை சேமிக்கும், குளிர்பதன கிடங்குகளின் எண்ணிக்கையையும் பல மடங்கு உயர்த்த வேண்டும்.

தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை

அரசு நேரடி காய்கறி விற்பனை மையத்திற்கு சென்று, பொதுமக்கள் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கலாம். தெருத்தெருவாக தள்ளுவண்டியில் சென்று காய்கறிகளை விற்பனை செய்யும் திட்டமும் அரசிடம் உள்ளது. சென்னை நகரில், 20 ஆயிரம் தள்ளுவண்டிகளில் காய்கறிகள் எடுத்துச் செல்லப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தெருக்களில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. மத்திய அரசு அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகளுடன் இத்திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *