கார் விற்பனையை அதிகரிக்க நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கை

posted in: வர்த்தகம் | 0

சென்னை: வட்டி விகிதம் உயர்ந்து வருவது, மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு, பணியாளர்கள் ஊதிய உயர்வு, பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது போன்றவற்றால், நாட்டின் மோட்டார் வாகனத்துறையின் விற்பனை வளர்ச்சி படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் சென்ற செவ்வாய்க்கிழமை, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை மீண்டும் 0.50 சதவீதம் உயர்த்தியுள்ளது இதனால் வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும் நிலை உருவாகி உள்ளது.

இவற்றையெல்லாம் எதிர்கொண்டு மோட்டார் வாகன நிறுவனங்கள், குறிப்பாக கார் தயாரிப்பு நிறுவனங்கள், அவற்றின் விற்பனையை நிலைநிறுத்திடும் வகையில் பல்வேறு சலுகைத் திட்டங்களை அளிக்கத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆடி மாதம் பிறந்தால் அம்மன் கோவில்கள் களை கட்டும். கூழ் ஊற்றுதல், முளைப்பாரி எடுத்தல் என, ஊரெங்கும் திருவிழாக்கோலமாக காட்சியளிக்கும். அதே சமயம், ஒரு சிலர், ஆடி மாதத்தில் புதிய திட்டங்கள் மேற்கொள்வதை தவிர்க்கின்றனர். இதனால், வீட்டு பயன்பாட்டு பொருள்கள் முதல், பலதரப்பட்ட நுகர்வோர் சாதனங்கள் வரையிலான விற்பனை, இம்மாதத்தில் சற்று மந்தமாக இருக்கும்.இதையொட்டி, பல்வேறு நிறுவனங்கள், ஆடி மாத விற்பனை என்ற பெயரில், கவர்ச்சிகரமான தள்ளுபடிச் சலுகைகளை வழங்கி, விற்பனையை அதிகரித்துக் கொள்கின்றன. இவ்வகையில், கார் தயாரிப்பு நிறுவனங்கள், அதிரடியாக விலை குறைப்பு செய்து, வாகன விற்பனையை உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.மாருதி ””கி நிறுவனம், ‘வேகன்ஆர், ஆல்டோ’ கார்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், மருந்து வியாபாரிகள் ஆகியோருக்கு சிறப்பு சலுகைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பழைய காருக்கு மாற்றாக, ‘வேகன்ஆர்’ கார் வாங்குவோருக்கு, ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. இத்துடன் ஒரு ரூபாய்க்கு காப்பீட்டு வசதி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்பட, 23 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி சலுகை அளிக்கப்படுகிறது. இச்சலுகை, ‘ஆல்டோ’ காருக்கு 33 ஆயிரம் ரூபாய் அளவிற்கு வழங்கப்படுகிறது.இதே போன்று, டாடா நிறுவனம், நானோ கார் விற்பனையை அதிகரிக்க, 85 சதவீத கடன் திட்டத்துடன், 60 ஆயிரம் கி.மீ., வரை இலவச பராமரிப்பு சேவை என்பது உள்ளிட்ட, பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.ஹோண்டா சீயல் கார்ஸ் நிறுவனம், இரு மாதங்களுக்கு முன்பாகவே, ‘ஹோண்டா சிட்டி’ கார் விலையை, 66 ஆயிரம் ரூபாய் வரை குறைத்தது. இந்நிலையில், தற்போது இந்நிறுவனம் அதன், ‘ஹோண்டா ஜாஸ்’ கார் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு, விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், ‘ஹோண்டா ஜாஸ்’ கார் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதன் அதிகபட்ச விலை, 7 லட்ச ரூபாய் என்ற அளவில் இருந்தது. இதில், தற்போது 1.75 லட்ச ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.சென்ற ஏப்ரல் – ஜூன் மாதங்களில், ‘ஹோண்டா ஜாஸ்’ விற்பனை, 39 சதவீதம் சரிவடைந்து, 643 கார்கள் என்ற அளவில் இருந்தது. சென்ற ஆண்டு, இதே காலத்தில் 1,050 கார்கள் விற்பனை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பியட் நிறுவனம், நூதன முறையில் விலை குறைப்பு செய்து, வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. இந்நிறுவனம், பெட்ரோலில் இயங்கும், ‘லினியா’ மற்றும் ‘புன்டோ’ கார்களுக்காக முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு, கூடுதல் விலை கொண்ட டீசலில் இயங்கும் கார்களை வழங்க முன்வந்துள்ளது. இதனால், பெட்ரோல் கார் விலையில், டீசல் கார் வாங்கும் வாய்ப்பை நுகர்வோர் பெற்றுள்ளனர்.’டீசல் கார் வேண்டாம்; பெட்ரோல் கார் தான் வேண்டும்’ என்று கோரும் வாடிக்கையாளர்களுக்கு, இந்நிறுவனம், வேறுபடும் தொகையான ஒரு லட்சம் ரூபாயை தள்ளுபடி செய்து, காரை வழங்குகிறது. குறிப்பிட்ட திட்டத்தின் கீழ், ஒரு சிலருக்கு ஓராண்டுக்கு பெட்ரோல் அல்லது டீசல் செலவுக்கான இலவச கூப்பன்கள் வழங்கப்படுகின்றன.

அது மட்டுமின்றி, இம்மாதம் பியட் கார் வாங்கும் அனைவருக்கும், 3 மாதங்களுக்கு இலவச எரிபொருள் மற்றும், 50 மாதங்களுக்கு இலவச பராமரிப்பு ஆலோசனையும் வழங்கப்படுகிறது.ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், அதன் செவர்லெட் பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும், ‘ஸ்பார்க், பீட்’ கார்களுக்கு, 3 ஆண்டுகள் அல்லது 45 ஆயிரம் கி.மீ., பயணம் வரையில், சலுகை கட்டணத்தில் பராமரிப்பு சேவையை வழங்குகிறது. இத்தொகை, மாடலை பொறுத்து, 14 ஆயிரத்து 499 முதல் 39 ஆயிரத்து 999 ரூபாய் வரை உள்ளது.

பல வங்கிகள், வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால், வாகன விற்பனை மந்தமடைந்துள்ளது. இப்பிரச்னையை சமாளிக்க, பல நிறுவனங்கள், அவற்றின் துணை நிறுவனங்கள் வாயிலாக, குறைந்த வட்டியில் வாகனக் கடன்களை வழங்கத் தொடங்கியுள்ளன.ஹூண்டாய் நிறுவனம், ‘சான்ட்ரோ’ மற்றும்’ஐ 10′ கார்களுக்கு, 5.99 சதவீத வட்டியில், 3 லட்ச ரூபாய் வரை கடன் வழங்குகிறது. மூன்று ஆண்டுகளில் கடனை திரும்பச் செலுத்தும் திட்டத்தின் கீழ், இக்கடன் வழங்கப்படுகிறது.வோக்ஸ்வேகன் நிறுவனம்,பெட்ரோலில் இயங்கும், ‘வென்டோ’ கார் விற்பனையை அதிகரிக்க, துணை நிறுவனம் வாயிலாக, 6.99 சதவீத வட்டியில் கடன் வழங்குகிறது. ‘இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘வென்டோ’ கார் விற்பனை, 30 முதல் 40 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்’ என,வோக்ஸ்வேகன் பாசஞ்சர் கார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் இயக்குனர் குழு உறுப்பினர் நீரஜ் கர்க் தெரிவித்தார்.

Source &   Thanks    :  dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *