தொலைத் தொடர்பு துறையின் வருவாய் ரூ.2.83 லட்சம் கோடியாக அதிகரிப்பு

posted in: வர்த்தகம் | 0

புதுடில்லி:சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, 2010-11ம் நிதியாண்டில், இந்திய தொலை தொடர்புத் துறை நிறுவனங்களின் வருவாய், 2 லட்சத்து 64 ஆயிரத்து 669 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்திய தொலை தொடர்பு துறையின் வளர்ச்சி குறித்து, ‘வாய்ஸ் அண்டு டேட்டா’ இதழ், ஆய்வு மேற்கொண்டது.


இதில், நாட்டில் தொலை தொடர்பு துறை (சாதனங்கள் தயாரிப்பு நீங்கலாக), சிறப்பான வருவாய் வளர்ச்சியை கண்டுள்ளதாக, இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்ற நிதியாண்டில், தொலை தொடர்பு துறையில் தொலைபேசி, மொபைல்போன், அகண்ட அலைவரிசை, விசாட், நீண்ட தூர, சர்வதேச தொலைத் தொடர்பு சேவை உள்ளிட்ட பிரிவின் வருவாய், 14.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து 66 ஆயிரத்து 168 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முந்தைய 2009-10ம் நிதியாண்டில், இப்பிரிவின் வருவாய், 1 லட்சத்து 44 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக இருந்தது.தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள், இப்பிரிவுகளில், அதிகளவில் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளதால், இத்தகைய வளர்ச்சி சாத்தியமாகியுள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தொலை தொடர்பு சாதனங்கள் பிரிவின் வளர்ச்சி குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, இப்பிரிவின் வருவாய், 2.52 சதவீதம் சரிவடைந்து, 1 லட்சத்து 20 ஆயிரத்து 69 கோடி ரூபாயில் இருந்து, 1 லட்சத்து 17ஆயிரத்து 39 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக, தொலை தொடர்பு உரிம விதிமுறைகளில், பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பெரும்பாலான நிறுவனங்கள், புதிய சாதனங்கள் வாங்குவதை குறைத்துக் கொண்டன. இதனால், தொலைத் தொடர்பு சாதனங்கள் பிரிவின் வருவாய் குறைந்துள்ளது.தொலை தொடர்பு துறையில், மொபைல் போன் பிரிவு, அதிகபட்ச வருவாய் ஈட்டி, முதலிடத்தில் உள்ளது. இப்பிரிவின் வருவாய், 16.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 87 ஆயிரத்து 680 கோடி ரூபாயில் இருந்து, 1 லட்சத்து 2 ஆயிரத்து 230 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சாதாரண தொலைப்பேசி (லேண்டு லைன்) பிரிவின் வருவாய் தொடர்ந்து குறைந்து வருகிறது. சாதாரண தொலைபேசி சந்தாதாரர் எண்ணிக்கையும், கணிசமாக வீழ்ச்சி கண்டுள்ளது. சென்ற நிதியாண்டில், இப்பிரிவின் வருவாய், 15.6 சதவீதம் சரிவடைந்து, 11 ஆயிரத்து 602 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.சென்ற மார்ச் நிலவரப்படி, நாட்டில், 50.10 கோடி பேர் மட்டுமே, தொலைத் தொடர்பு சேவையை பயன்படுத்துவதாக, ஆய்வறிக்கை மதிப்பிட் டுள்ளது. ஆனால், இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிக்கையில், இந்த எண்ணிக்கை, 57.40 கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தொலை தொடர்பு நிறுவனங்கள், அயல்நாட்டு சந்தைகளில் காலூன்றி வருவது அதிகரித்து வருகிறது. எனவே, சர்வதேச தொலைத் தொடர்பு சேவை வாயிலான வருவாய், 10 சதவீதம் அதிகரித்து, 20 ஆயிரத்து 530 கோடி ரூபாயில் இருந்து, 22 ஆயிரத்து 607 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.அகண்ட அலைவரிசை சேவை பிரிவின் வருவாய், 22.4 சதவீதம் உயர்ந்து, 5,591 கோடி ரூபாயில் இருந்து, 6,846 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதில், பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வருவாய் 40 சதவீதமும், எம்.டி.என்.எல் நிறுவனத்தின் வருவாய் 8 சதவீதமும் உயர்ந்துள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *