தொடர் சரிவிலிருந்து மீண்டது பி.எஸ்.இ. ‘சென்செக்ஸ்’ 68 புள்ளிகள் உயர்ந்தது

posted in: வர்த்தகம் | 0

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் புதன்கிழமையன்று ஓரளவிற்கு சூடுபிடித்து காணப்பட்டது.

அமெரிக்காவின் ‘டோவ் ஜோன்ஸ்’ பங்கு சந்தையின் குறியீட்டு எண் 30 மாதங்களுக்கு பிறகு 12,000 புள்ளிகளை தாண்டியது என்ற செய்தியும், சென்ற ஜனவரி மாதத்தில் அமெரிக்காவின் உற்பத்தி துறையின் வளர்ச்சி நல்லளவில் உயர்ந்துள்ளது என்ற தகவலும், ஐரோப்பா மற்றும் இந்தியா உள்ளிட்ட இதர ஆசிய பங்கு சந்தைகளில் ஓரளவிற்கு மீண்டும் எழுச்சி காண வழிவகுத்தது.

உள்நாட்டில் மதியம் வரை பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இந்நிலையில், மத்திய தகவல் தொழில் நுட்ப துறையின் முன்னாள் அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டார் என்ற செய்தியால் பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது.மேலும், லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், வங்கி, பொறியியல், நுகர்வோர் சாதனங்கள், மின்சாரம் போன்ற துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து போனது. இருப்பினும், ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவைப்பாடு இருந்தது.டாட்டா மோட்டார்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டன. இவற்றின் வருவாய் மற்றும் நிகர லாபம் சந்தை மதிப்பீட்டையொட்டி இருந்ததால், இவற்றின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 68.40 புள்ளிகள் உயர்ந்து 18,090.62 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,306 புள்ளிகள் வரையிலும், 18,042.61 புள்ளிகள் வரையிலும் சென்றது. ‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் 17 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் ‘நிப்டி’ 14.80 புள்ளிகள் அதிகரித்து, 5,432 புள்ளிகளில் நிலை கொண்டது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.