விடுதலைப்புலிகளின் 8 கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பில் சுற்றித் திரிகின்றன – அரசாங்கம்

விடுதலைப்புலிகள் அமைப்புக்குச் சொந்தமாகவிருந்த 20 கப்பல்களில் 11 கப்பல்கள் அழிக்கப்பட்டும் ஒரு மிகப்பெரிய கப்பல் கைப்பற்றப்பட்டுமுள்ளநிலையில் இன்னும் 8 கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பில் சுற்றித்திரிகின்றன என பாதுகாப்புச் செயலாளர் சார்பில் பாராளுமன்ற பிரதம கொறடா தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றத்தில் ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையிலேயே பாதுகாப்புச் செயலாளர் கையொப்பமிட்டு வழங்கியதன் பிரகாரம் பிரதம கொறடாவினால் மேற்கண்டவாறு வாசிக்கப்பட்டது.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

விடுதலைப்புலிகளின் மீதமுள்ள 8 கப்பல்களையும் கைப்பற்றுவதில் இலங்கை அரசுக்கு பல்வேறு சட்டச் சிக்கல்கள் உள்ளன. அக்கப்பல்கள் இராஜதந்திர ரீதியாக வெளிநாட்டுக் கம்பனிகளின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளமையே இச்சிக்கல்களுக்கு காரணம் என அரசு அறிவித்துள்ளது.

இக்கப்பல்களில் சில சர்வதேச புலிகளின் செயற்பாட்டாளர்களினால் ஆட்கடத்தல் போன்ற சட்டவிரோத பணிகளுக்கு பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. சில கப்பல்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் தென்கிழக்காசிய நாடொன்றின் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சில கப்பல்கள் பதிவு செய்யப்பட்ட விதத்திற்கேற்ப அவை அரசுடமையாக்கிக் கொள்வதற்கு இராஜதந்திர நடவடிக்கைகள் தடையாக அமைந்துள்ளன. எனினும் அதற்குரிய ஆய்வுகள் நடைபெறுகின்றன. தற்போது அவை தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற புலனாய்வுப்பணியின் பாதுகாப்பு தொடர்பாக மேலதிக விபரங்களை வழங்கமுடியாதுள்ளது என தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *