தொடக்க கல்வி ஆசிரியர்கள் பேரணி : எழும்பூரில் போக்குவரத்து பாதிப்பு

posted in: தமிழ்நாடு | 0

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜேக்) சார்பில், சென்னையில் பல ஆயிரம் பேர் பங்கேற்ற கோரிக்கை பேரணி மற்றும் கோட்டை நோக்கி ஊர்வலம் நடந்தது.

ஏராளமானோர் குவிந்ததால், எழும்பூரில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும் தர ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக, 21 ஆண்டுகளாக ஊதியம் வழங்கியது போல், தொடர்ந்து ஆறாவது ஊதியக் குழுவிலும் வழங்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்கள் ஊதியத்திற்கு இணையாக, தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள இரு வேறுபட்ட ஊதியத்தை மாற்றியமைக்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகள் பணி முடித்தோருக்கு முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தி வருகிறது. தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இக்குழு சார்பில், சென்னை எழும்பூரில் நேற்று காலை கோரிக்கை பேரணி நடந்தது. தமிழகம் முழுவதுமிருந்து பல ஆயிரம் ஆசிரியர்கள், ராஜரத்தினம் ஸ்டேடியம் முன் கூடினர்.

கூட்டமைப்பின் நிர்வாகிகள் ரங்கராஜன், அப்துல் மஜீத், வின்சென்ட் பால்ராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். எழும்பூரில் துவங்கிய பேரணி, எல்.ஜி., சாலை, பாந்தியன் சாலை சந்திப்பில் நிறைவடைந்தது. கூட்டமைப்பின் நிர்வாகிகள், புதிய தலைமைச் செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசுவைச் சந்தித்து மனு கொடுத்தனர். போக்குவரத்து ஸ்தம்பிப்பு: அரசியல் கட்சிப் பேரணிகளை மிஞ்சும் அளவில், தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர். ஏராளமானோர் கூடியதால் பேரணியை வழி நடத்த முடியவில்லை.

ருக்மணி லட்சுமிபதி சாலை, பாந்தியன் சாலை, எல்.ஜி., சாலை, ஏ.என்., சாலை என பல்வேறு சாலைகளிலும் பேரணி சென்றதால், எழும்பூர் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திண்டாடினர்.

Source & thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.