அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் ஐகோர்ட்டில் தமிழில் வாதாட நடவடிக்கை : ஜெயலலிதா

posted in: தமிழ்நாடு | 0

சென்னை :“ஐகோர்ட்டில் தமிழில் வாதாட வேண்டும் என்ற வக்கீல்களின் கோரிக்கைக்கு அ.தி.மு.க., தனது முழு ஆதரவு அளிக்கும்’ என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற போர்வையில், தனக்குத்தானே தம்பட்டத் தன்னல மாநாடு நடத்திக் கொள்வதற்கான நடவடிக்கையில் முதல்வர் கருணாநிதி மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்.ஐகோர்ட்டில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, வக்கீல்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பது குறித்து அவர் வாய் திறக்கவில்லை. இதிலிருந்து கருணாநிதிக்கு தமிழர்கள் மீதோ, தமிழ் மொழி மீதோ உண்மையான அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது. தன்னல தம்பட்ட மாநாட்டிற்கு 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் போது கோர்ட்டில் தமிழில் வாதாடுவதற்கு 32 கோடி ரூபாய் நிதியை கருணாநிதி ஏன் ஒதுக்கக் கூடாது?தமிழில் வாதாடுவது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வக்கீல்கள் சென்னை ஐகோர்ட் வளாகத்திற்குள் போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.

தன் மகனுக்கு பதவி வேண்டும் என்றால் டில்லி செல்லும் கருணாநிதி, தன் குடும்ப உறுப்பினர்களை மேலவை உறுப்பினர்களாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேலவைக்கான ஒப்புதலைப் பெற டில்லி செல்லும் கருணாநிதி, இந்த பிரச்னையை நிறைவேற்ற ஏன் டில்லி செல்ல மாட்டேன் என்கிறார்?டில்லி சென்ற போது இதைப் பற்றி கருணாநிதி ஏன் வலியுறுத்திப் பேசவில்லை? மாவட்ட கோர்ட்டுகளில் தமிழில் வாதாட வழிவகுத்தவர் எம்.ஜி.ஆர்., என்பதை சுட்டிக் காட்டுகிறேன். வக்கீல்களின் இந்தக் கோரிக்கைக்கு அ.தி.மு.க., தனது முழு ஆதரவை அளிக்கும்.வரும் 2011ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் இப்பிரச்னைக்குத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *