போபால் விஷ வாயு வழக்கு: 8 பேருக்கு 2 ஆண்டு சிறை

போபால்,​​ ஜூன் 7:​ மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள விஷவாயு வழக்கில் 8 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.​ இந்தச் சம்பவம் நடந்து 26 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.​ குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 2 ஆண்டு சிறைத்தண்டனையும் தலா ரூ.​ 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

உலகிலேயே மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.​ போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் மீதைல் ஐசோசயனைடு நச்சுவாயு கசிந்ததில் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.​ 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.​ 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது.

இந்த வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் செயல் தலைவர் கேஸýப் மஹிந்திரா உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.​ 85 வயதான கேஸýப் மஹிந்திரா இந்நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பொறுப்புகள் இல்லாத செயல் தலைவராக இருந்தார்.

திங்கள்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால்,​​ நீதிமன்றத்தில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.​ இதனால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.​ குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் ஒருவர் தவிர மற்ற 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

குற்றப்பிரிவு 304-ஏ ​(மரணத்துக்கு காரணமாக இருத்தல்)​ 304-2 ​(பெரும்பாலான மக்களின் உயிரிழப்புக்குக் காரணமாக இருத்தல் மற்றும் விதி 336 மற்றும் 337 பிரிவுகளின் கீழும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இருப்பினும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரென் ஆண்டர்சன் ​(89) பற்றி நீதிபதி தனது தீர்ப்பில் எதுவும் குறிப்பிடவில்லை.​ தலைமறைவு குற்றவாளி என்று 23 ஆண்டுகளுக்கு முன்னரே வாரென் ஆண்டர்சன் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக நிறுவனத்தின் முன்னாள் செயல் தலைவர் கேஸýப் மஹிந்திரா,​​ நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் விஜய் கோகலே,​​ நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் கிஷோர் காம்தார்,​​ செயல் மேலாளர் ஜே.என்.​ முகுந்த்,​​ உற்பத்தி மேலாளர் எஸ்.பி.​ செüத்ரி,​​ ஆலை கண்காணிப்பாளர் கே.வி.​ ஷெட்டி,​​ உற்பத்தி உதவியாளர் எஸ்.ஐ.​ குரேஷி ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.​ இவர்களில் எஸ்.ஐ.​ குரேஷி மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்த வழக்கில் 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த துணை செயல் மேலாளர் ஆர்.பி.​ ராய்,​​ வழக்கு விசாரணையின்போதே உயிரிழந்துவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 178 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.​ இதில் சாட்சிகள் அளித்த 3008-பக்க ஆவணமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நிறுவனத்தின் உரிமையாளரான வாரென் ஆண்டர்சன்,​​ இதுவரை விசாரணை எதிலும் பங்கேற்கவில்லை.​ 2,000 டாலர் ஜாமீன் தொகை செலுத்தி அமெரிக்கா சென்ற ஆண்டர்சன் அதற்குப் பிறகு இந்தியாவுக்கு வரவேயில்லை.

மிக மோசமான இந்த விஷ வாயு வழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கை 1984-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி பதிவு செய்யப்பட்டது.​ பின்னர் டிசம்பர் 6-ம் தேதி இந்த வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.​ 1987-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணையை சிபிஐ தொடங்கியது.​ இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க உள்ளூர் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது.

சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் சி.​ சஹாய் ஆஜராகி,​​ யூனியன் கார்பைடு ஆலையில் உள்ள உலை உரிய வகையில் பரமாரிக்கப்படதாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக வாதிட்டார்.​ இந்த விபத்து நடந்த உடனேயே 2,259 பேர் உடனடியாக உயிரிழந்தனர்.​ காற்றில் பரவிய மீதைல் ஐசோ சயனைடு நச்சால் 15 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.

1982-ம் ஆண்டே இந்த ஆலையை ஆய்வு செய்தபோது இதில் பராமரிப்பு குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது.​ அமெரிக்காவிலிருந்து நிபுணர்கள் வந்து பராமரிப்பு குறையை சுட்டிக் காட்டியபோதிலும் அவை மேற்கொள்ளப்படவேயில்லை என்று சஹாய் கூறினார்.

இந்த விபத்து நடந்த பிறகு மத்திய குழு இந்த ஆலையைச் சுற்றிப்பார்த்தபோது பாதுகாப்பு மற்றும் நிர்வாக குறைபாடுகள் இருந்தது தெரியவந்ததாக அவர் கூறினார்.

ஆனால் ஆலை உரிய வகையில் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்ததாக எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் டி.​ பிரசாத்,​​ அமித் தேசாய் ஆகியோர் ​ வாதாடினர்.​ 1982-ம் ஆண்டு இந்த ஆலையில் ஊழியர் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள தாய் நிறுவனத்திலிருந்து நிபுணர்கள் வந்து ஆலையை சோதித்ததை வழக்கறிஞர்கள் மறுத்தனர்.

பாதுகாப்பு விஷயத்தில் யூனியன் கார்பைடு ஆலை ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது என்றும்,​​ ஆலை நிர்வாகம் மற்றும் பராமரிப்புக்கென்றே பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

அனைவருக்கும் ஜாமீன்

குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.​ இதையடுத்து அனைவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

2002-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதுக்கு கேஸýப் மஹிந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.​ இவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றதால் இந்த விருது அவருக்கு வழங்கப்படவில்லை.

மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி :

தாமதமாகக் கிடைக்கும் நீதி;​ நீதி மறுக்கப்படுவதற்கு சமம் என்பதற்கு இந்த வழக்கும் ஒரு உதாரணம்.​ எனினும் இந்த வழக்கில் நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது.

பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத்:

ஏற்கெனவே விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் வலியைத் தருவதாக இந்த வழக்கின் தீர்ப்பு அமைந்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட கட்சியின் தேசியச் செயலர் டி.​ ராஜா:

வழக்கை விசாரித்த சிபிஐ,​​ நீதியை நிலைநாட்டுவதில் முழுமையாகத் தோல்வியடைந்து விட்டது.​ சிபிஐ-யின் தோல்விக்கு பிரதமர் மன்மோகன் சிங் தான் பொறுப்பேற்க வேண்டும்.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.