ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராசாவை பதவியில் இருந்து நீக்குங்கள்: பாஜக

புது தில்லி, ஜூன் 3: ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத், தில்லியில் வியாழக்கிழமை கூறியிருப்பது:

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 22 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதை இந்திய தணிக்கைத் துறை அறிக்கையும், சிபிஐ விசாரணையும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன் என்று பிரதமர் முன்னதாகவே உறுதியளித்திருந்தார். அவர் கூறியபடி நடத்து கொள்பவராக இருந்தால் நாட்டுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி, ஊழலில் ஈடுபட்டுள்ள மத்திய அமைச்சர் ராசாவை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

இந்த நடவடிக்கை மூலம் தான் பொதுவாழ்வில் எவ்வளவு தூய்மையானவர் என்பதை மன்மோகன் சிங் தெளிவாக்க வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பல்வேறு விஷயங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை, நியாமற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று இந்திய தணிக்கைத் துறையும் தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதில் இருந்தே முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியாகிறது.

மேலும் 2ஜி அலைக்கற்றை விண்ணப்பிக்கும் தேதியை திடீரென சுமார் ஒருமாதம் குறைந்து தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் அறிவித்தது. இதனால் 575 விண்ணப்பங்களில், 343 விண்ணப்பங்கள் ஏலத்துக்கு தகுதியற்றதாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இதுவும் மோசடியின் ஒருபகுதி.

இப்போதைய விசாரணையில் ரூ. 22 ஆயிரம் கோடி இழப்பு ஏன்று தெரியவந்துள்ளது. விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினால் இதில் மேலும் எவ்வளவு கோடி ஊழல் நடந்துள்ளது என்பது வெளிச்சத்துக்கு வரும் என்றார் அவர்.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.