வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியுள்ள 46 லட்சம் பேர்களில், 40 லட்சம் பேர் பெயர் சேர்ப்புக்கு மனு மீதமுள்ள 6 லட்சம் பேரையும் ஜுன் 5-க்குள் சேர்க்க நடவடிக்கை

posted in: தமிழீழம் | 0

தமிழகம் முழுவதும் வீடு, வீடாக 100 சதவீத வாக்காளர் சரிபார்ப்புப் பணி நடந்தது. இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக புதிதாக 46 லட்சம் பேர் கண்டறியப்பட்டனர்.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் நடைபெற்ற வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் கடந்த 26-ந் தேதி, வீடியோ கான்பரன்சிங் மூலம், கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், களசரிபார்ப்புப் பணியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த சரிபார்ப்பு நடவடிக்கையின் மூலமாக, வாக்காளர் பட்டியலில் 46 லட்சத்து 7 ஆயிரம் பேரது பெயர்கள் சேர்க்கப்பட தகுதியுள்ளனவாக கண்டறியப்பட்டன. இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில், 40 லட்சத்து 8 ஆயிரம் பேர், தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோரி மனு (படிவம்-6) அளித்துள்ளார்கள். மீதமுள்ள சுமார் 6 லட்சம் பேர் மனுக்களை தரவில்லை. அந்த 6 லட்சம் பேரிடமிருந்து, ஆதார ஆவணம் (ரேஷன் கார்டு போன்ற) மற்றும் புகைப்படம் போன்றவற்றுடன் படிவம்-6 மனுக்களையும் சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவு அதிகாரிகள் ஜுன் 5-ந் தேதிக்குள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோல், வாக்காளர் பட்டியலில் 9 லட்சத்து 2 ஆயிரம் பேரின் விவரங்களில் சில திருத்தங்களை செய்ய வேண்டியுள்ளதும் கண்டறியப்பட்டது. அவர்களில், உரிய திருத்தங்களை மேற்கொள்ளவேண்டி, 7 லட்சத்து 37 ஆயிரம் பேர் மனு (படிவம்-8) செய்துள்ளார்கள். இதிலும், விடுபட்டவர்களிடமிருந்து உரிய படிவங்களை அதிகாரிகள் பெறவேண்டும்.

சமீபத்தில், பெங்களூரு நகரில் தென்மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாடு நடைபெற்றது. அதில், “வரும் ஜுலை மாதத்தில், நாடு முழுவதிலும் 2010-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அதற்கு முந்தைய (களசரிபார்ப்புப் பணி போன்ற) பணிகளில் எவ்வித குறைபாடும் இருக்கக்கூடாது” என்று இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது. அதன் அடிப்படையிலேயே கடந்த 26-ந் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இவ்வாறு அதில் நரேஷ்குப்தா கூறியுள்ளார்.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.