பயங்கரவாதத்தை ஒழித்த எவரையும் தண்டிக்க முடியாது!: மஹிந்த அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி

பயங்கரவாதத்தை ஒழித்த எவரையும் தண்டிக்க முடியாது! தமிழ்த் தலைவர்களுடன் இணக்கத்துக்கு வரத் தயார்! இவ்வாறு அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவரது நீண்ட செவ்வியின் முக்கிய பகுதிகளை இங்கே தருகின்றோம்.

* வன்னிப் போரின் போது குற்றம் இழைக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவர். ஆனால் பயங்கரவாதத்தை தோற்கடித்த எவரையும் தண்டிக்க முடியாது.

* தமிழ் அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவதற்கு அரசாங்கம் தயார். அதனாலேயே நான் அவர்களைப் பேச்சுக்கு அழைத்துள்ளேன். நான் அவர்களை நம்புகின்றேன். அவர்களும் என்மீது நம்பிக்கை வைத்து பேச்சுவார்தைக்கு வரவேண்டும்.

* கடந்த வருடம் நடந்த போரின் போது குற்றம் ஏதும் இழைக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவர். அவர்கள் எனது உறவினர்களாக இருப்பினும், இராணுவத் தளபதியாக இருப்பினும் தண்டிக்கப்படுவர். குற்றத்தை எவர் இழைத்தாலும் அவர் குற்றவாளியே.

* ஆனால் பயங்கரவாதத்தைத் தோற்கடித்த எவரையும் நாம் தண்டிக்க முடியாது. பயங்கரவாதத்தைத் தோற்கடித்தவர்களை தண்டிக்க வேண்டுமென்று சர்வதேச சமூகம் கூறுமானால் அதனை என்னால் ஏற்க முடியாது.

* போரின்போது நாம் பொதுமக்கள் எவரையும் கொல்லவில்லை. பொதுமக்கள் மீது இலக்கு வைத்து தாக்குதல் எதனையும் நடத்தவில்லை.

* நடைபெற்றது போரென்பது உண்மை தான். ஆனால் பொதுமக்கள் தமது பாதுகாப்பின் நிமித்தம் அரசாங்கப் பகுதிக்கு வந்தார்கள். எமது படையினர் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் அவர்கள் எவ்வாறு படையினரை நம்பி அரசாங்கப் பகுதிக்கு வந்திருப்பார்கள்?

* அவர்கள் அரசாங்கத்தை, படையினரை நம்பாவிடில் எவ்வாறு 3 லட்சம் மக்கள் இராணுவ முகாம்களை நோக்கி வந்திருப்பார்கள்.

* அரசாங்கப்படைகள் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றால் குற்றம் இழைக்கவில்லை என்றால் சர்வதேச சுயேட்சையான குழு விசாரணைக்கு ஏன் அனுமதிக்கவில்லை என்று கேட்கிறீர்கள்.

* இந்த நாட்டில் நடைபெற்ற போர் முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம். எமது விவகாரம் குறித்து வெளிநாடுகளோ அரச சார்பற்ற நிறுவனங்களோ விசாரிப்பதை நான் விரும்பவில்லை. அதனாலேயே யுத்த நெறிமுறைகள் மீறப்பட்டதா என்பதை கண்டறிவதற்காக விசேட விசாரணைக்குழு ஒன்றை நியமித்துள்ளோம்.

* போர்க் குற்றங்கள் போன்று எதுவும் இடம்பெற்றிருப்பின் எமக்கு முறையிடட் டும். நாங்கள் அது குறித்து விசாரிப்போம்.

* நாம் உள்நாட்டிலேயே விசாரணை நடத்துவதால் அதில் வெளிப்படைத் தன்மை இருக்குமா என்று கேட்கிறீர்கள்.

ஆனால் இத்தகைய கேள்வியை அமெரிக்காவிடம் கேட்கமாட்டீர்கள். ஈராக்கில், ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் என்ன நடக்கிறது என்று பிரிட்டிஷ்காரரிடமோ அல்லது அமெரிக்காவிடமோ நீங்கள் கேட்பதில்லை. ஏன்? இலங்கையிடம் நியாயமாக நடந்துகொள்ளுங்கள்.

நாங்கள் பயங்கரவாதத்தை ஒழித்திருக்கிறோம் என்பதனால் எங்களை கொள்ளிக் கண்கொண்டு பார்க்காதீர்கள்.

* வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இலங்கைக்கு வர விரும்பவில்லை. அங்கு உள்ளது போல் இங்கு உல்லாச வாழ்க்கை நடத்த முடியாது என்று நினைக்கிறார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு இதுவரை சென்றதில்லை. கொழும்புக்கு அப்பால் சென்றதில்லை. தமது மக்களையே அவர்கள் சென்று சந்தித்ததில்லை. அங்குள்ள மக்களுடன் எந்தவித கலந்துரையாடலையும் நடத்தியதும் இல்லை.

* ஆனால் நான் திருகோணமலை, மட்டக்களப்பு , யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்குச் சென்று அவர்களின் குறைநிறைகளை கேட்டறிகின்றேன். சாதாரண பொது மக்களுடனேயே நேரடியாகக் கலந்துரையாடுகின்றேன்.

* தமிழ்க் குழுக்கள் தமக்கும் பிரதிநிதித்துவம் தேவை என்று சொல்வதாகக் கூறுகிறீர்கள். தமிழ் அரசியல் தலைவர்களும் தங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் தேவையென குறைப்படுவதாகவும் சொல்கிறீர்கள். அவர்களை நான் நம்புகிறேன் என்றும் கேட்கிறீர்கள்.

* நான் அவர்களை நம்புகின்றேன். அவர்களும் என்னை நம்பவேண்டும். அதனால் தானே நாம் அவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்திருக்கின்றேன்.

தமிழ் அரசியல் வாதிகளில் பலர் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தவர்கள். அவர்கள் நாடாளுமன்றத்தில் புலிகளையே பிரதிநிதித்துவம் செய்தார்கள் என்பதும் உண்மை. ஆகையால் அவர்களை பேச்சுக்கு அழைப்பது எமது கடமையென்று நினைத்தோம். அதனாலேயே அவர்களை பேச்சுக்கு அழைத்திருக்கின்றேன்.

அவர்கள் எங்களுடைய கஷ்டங்களை உணர்ந்துகொள்ள வேண்டும். அரசாங்கத்தின் கஷ்டங்களை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் எங்களுடன் பேசி, இருதரப்புகளும் ஓர் இணக்கத்துக்கு வரவேண்டும். நாங்கள் இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதற்கு தயாராக இருக்கின்றோம்.

எங்களைப் பொறுத்தமட்டில் தமிழர்களாக இருந்தால்லென்ன, முஸ்லிம்களாக இருந்தாலென்ன, சிங்களவர்களாக இருந்தாலென்ன அவர்கள் எமது மக்களே. அதனை நான் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் எல்லோரும் எமதுநாட்டு மக்களே என்ற கண்ணுடனேயே எப்போதும் பார்ப்பதுண்டு என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *