‘முழு உடல்’ காட்டும் ஸ்கேனர் கருவிகள்: இந்தியாவிலும் பொருத்த திட்டம்?

புதுடில்லி : தற்போது அமெரிக்க விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வரும், முழுஉடல் பரிசோதனைக் கருவிகள் (ஸ்கேனர்), விரைவில் இந்திய விமான நிலையங்களிலும் வர உள்ளது.

பெண்கள் உடலில் செலுத்திக் கொள்ளும், ‘சிலிக்கானை’க் கூட இது வெட்ட வெளிச்சமாகக் காட்டி விடும். அமெரிக்க விமான நிலையங்களில் முழு உடல் பரிசோதனைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பாதுகாப்பு குறித்த விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள முடியாது என, அமெரிக்கா உறுதியுடன் தெரிவித்து விட்டது.

பயங்கரவாதம் பல வடிவம் எடுத்து உலவி வரும் வேளையில், இந்திய விமான நிலையங்களிலும் இந்த முழுஉடல் பரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து, இந்திய விமான நிலைய உயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ‘மில்லி மீட்டர் வேவ் ஸ்கேனர்’ மற்றும் ‘பேக்ஸ்கேட்டர் ஸ்கேனர்’ என, இருவகைக் கருவிகள் தற்போது தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் மி.மீ., ஸ்கேனர் என்பது வட்டவடிவில் இருக்கும். இதன் சுவர்களில் கண்ணாடி இருக்கும். சுவர்களில், ஸ்கேன் செய்யும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். அவற்றிலிருந்து சிறிய அளவிலான ரேடியோ அலைகள் வெளிவந்து உடலைத் தொட்டு, திரும்பும். பாதுகாப்பு அறையில் பொருத்தப்பட்டுள்ள கணினி திரையில் உடல் முழுவதும் தெரியும். மனித சதைக்கு மாறாக ஏதேனும் இருந்தால், சத்தம் வரும். ‘பேக்ஸ்கேட்டர் ஸ்கேனர்’ கருவி, இரண்டு செவ்வகப் பெட்டி வடிவிலான தூண்களாக இருக்கும். இவற்றுக்கிடையில் ஒருவர் நிற்கும்போது, அவர் உடலின் மீது, தூண்களிலிருந்து குறைந்த வீச்சுடைய எக்ஸ்-ரே கதிர்கள் வெளிவரும். அவை உடலில் பட்டு திரும்பும்.

இந்த இரண்டு முறையிலும், பரிசோதிக்கப்படுபவரின் உடல் மற்றோர் இடத்தில் வைக்கப் பட்டுள்ள கணினி திரையில்தான் தெரியும். இந்த இரண்டு, ‘ஸ்கேனர்’களுமே, உடலில், சதை தவிர மற்ற எந்த பொருளையும் துல்லியமாகக் காட்டி விடும். பேஸ்மேக்கர், எலும்புக்கு பதிலாக பொருத்தப்படும் இரும்பு கம்பிகள், சிலிக்கான் பொருத்தப்பட்ட செயற்கை மார்பகங்கள் ஆகியவற்றை துல்லியமாக காட்டி விடும். இதுகுறித்து, விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,’இந்தக் கருவிகளிலிருந்து வரும் கதிர்கள், நம் உடலில் படும் சூரியக் கதிர்களை விட குறைவான சக்தி உடையவைதான். ஆனாலும் இவற்றின் மூலம் உடல்நலத்துக்குத் தீங்கு ஏற்படுமா என்று ஆராய்ந்த பின்னரே இவை நிறுவப்படும். அதே நேரம், பெண்களை பெண் அதிகாரிகளும், ஆண்களை ஆண் அதிகாரிகளும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படலாம்’ என்று தெரிவித்தார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.