தமிழக மீனவர்கள் மீது வெடிகுண்டு வீசி இல‌‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் தா‌க்குத‌ல்

நடுக்கடலில் ராமே‌ஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் வெடிகுண்டுகளை வீசி தா‌‌க்குத‌ல் நட‌த்‌‌திய‌தி‌ல் படகு சேதம் அடைந்து கடலில் மூழ்கியது. தண்ணீரில் தத்தளித்த 4 மீனவர்களையும் மற்ற மீனவர்கள் காப்பாற்றினர்.

ராமே‌ஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க 539 விசைப்படகுகள் சென்றன. அவர்களில், ஸ்டீபன், மெகலன், பிரபு, அலெக்ஸ் ஆகிய 4 பேர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் நெடுந்தீவு பகுதியில் இருந்து ஒரு பிளாஸ்டிக் படகில் 3 இலங்கை மீனவர்கள் அங்கு வந்தனர்.

அவர்கள் ராமே‌ஸ்வரம் படகு அருகே வந்து, ”இது எங்கள் பகுதி, இங்கு மீன்பிடிக்கக் கூடாது, இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது” என்று கூறி தகராறு செய்தனர்.

பின்னர் திடீரென்று அவர்கள் தாங்கள் வைத்திருந்த வெடிகுண்டுகளை ராமே‌ஸ்வரம் மீனவர்களை நோக்கி வீசின‌‌ர். இதனால் பயந்துபோன 4 பேரும் கடலுக்குள் குதித்தனர். இலங்கை மீனவர்கள் வீசிய வெடிகுண்டு ராமே‌ஸ்வரம் மீனவர்களின் படகில் விழுந்தது. இதனால் படகு சேதம் அடைந்தது. படகுக்குள் தண்ணீர் புகுந்ததால் அது மூழ்கியது. பின்னர் இலங்கை மீனவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

ராமே‌ஸ்வரம் மீனவர்கள் 4 பேரும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் விரைந்து சென்று 4 பேரையும் காப்பாற்றி தங்கள் படகில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்தனர்.

இது குறித்து மீன்துறை அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் ராமே‌ஸ்வரம் மீனவர்களிடம் மீன்துறை உதவி இயக்குநர் இளம்வழுதி, காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர் அஸ்மத்துல்லாகான், மத்திய, மாநில புலனாய்வு துறையினர், தனிப்பிரிவு காவல‌ர்க‌ள் ஆகியோர் விசாரணை நட‌த்‌தி வருகின்றனர்.

Source & Thanks : webdunia.com

Leave a Reply

Your email address will not be published.