பார்லிமென்ட் வளாகத்தில் சிலைகளுக்கு தடை : சபாநாயகர் தலைமையில் கட்சிகள் முடிவு

புதுடில்லி : ‘பார்லிமென்டின் விசாலமான மற்றும் அழகான தோற்றத்தைப் பேணிக்காப்பதற்காக, அங்கு இனி சிலைகள் மற்றும் தலைவர்களின் உருவப்படம் வைப்பதில்லை’ என, முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்ட கமிட்டி முடிவு செய்துள்ளது.

பார்லிமென்டில் தற்போது பிராந்திய மற்றும் தேசிய தலைவர்கள் என, 50க்கும் மேற்பட்ட தலைவர்களின் சிலைகள் மற்றும் உருவப்படங்கள் உள்ளன. கடந்த 2004ல் சோம்நாத் சட்டர்ஜி சபாநாயகராக இருந்த போது, பார்லிமென்டின் மத்திய மண்டபத்தில், புதிய தலைவர்களின் உருவப்படம் அமைக்க தடை விதித்தார். அத்துடன் பார்லிமென்டின் நூலக கட்டடத்தில் அவற்றை வைப்பதற்காக தனிப் பிரிவைத் துவக்கினார்.

இந்நிலையில், பார்லிமென்ட் வளாகத்தில் தேசிய தலைவர்கள் மற்றும் பிரபல எம்.பி.,க்களின் சிலைகள் மற்றும் உருவப்படங்களை நிறுவுவது தொடர்பான உயர் மட்டக் குழுவின் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. லோக்சபா சபாநாயகர் மீராகுமார் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி உட்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது, ‘பார்லிமென்டின் விசாலமான மற்றும் அழகான தோற்றத்தை பேணிக்காக்கும் வகையில், அங்கு இனி சிலைகள் மற்றும் உருவப்படங்கள் வைப்பதில்லை’ என, முடிவு செய்யப்பட்டது.இருந்தாலும், அரிதிலும் அரிதான விவகாரங்களில் மட்டுமே சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்படும். அதுவும் பார்லிமென்டின் மரபுரிமை கமிட்டியின் ஒப்புதல் கிடைத்த பிறகே, இதற்கான அனுமதி வழங்கப்படும். இந்தக் கமிட்டிதான் பார்லிமென்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.குழுவினர் விதித்த தடையால், பார்லிமென்ட் வளாகத்தில், இனி தலைவர்களின் படங்களைத் திறப்பது ஒரு அடையாளமாகவே நடைபெறும். அதன்பின், அந்த ஓவிய உருவப் படங்கள் பார்லிமென்ட் நூலகத்திற்கு மாற்றப்படும்.

‘பார்லிமென்ட் வளாகத்தில் சிலைகளை தடைசெய்ய வேண்டும்’ என, நீண்ட நாட்களாக பல தரப்பிலும் கோரப்பட்டது. லோக்சபா முன்னாள் சபாநாயகர் சங்மா கூட இதற்கு ஆதரவு தெரிவித்தார். இருந்தாலும், அரசியல் ரீதியான நிர்பந்தங்கள் காரணமாக, உடனடியாக முடிவு எடுக்கப்படவில்லை. தற்போது அதற்கான நேரம் வந்துள்ளது.அதே நேரத்தில், ‘தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் என்.டி.ராமராவ் சிலையை நிறுவ வேண்டும்’ என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவது பற்றி குழுவினர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. என்.டி.ஆர்., சிலையை நிறுவ ஏற்கனவே பொதுநோக்க கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.