புதிய சட்டசபையில் முதல் கூட்டம் தொடங்குகிறது தமிழக பட்ஜெ

posted in: தமிழ்நாடு | 0

புதிதாக திறக்கப்பட்ட சட்டசபையில் முதல் கூட்டத் தொடர் நாளை மறுநாள் (19 ஆம் தேதி) தொடங்குகிறது. அன்று காலை 9.30 மணிக்கு 2010-2011ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்கிறார். அதில் பல புதிய அறிவிப்புகள், திட்டங்கள், வரிச் சலுகைகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக சட்டசபை, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கடந்த நூறு ஆண்டுகளாக நடந்து வந்தது. அங்கு இடநெருக்கடி ஏற்பட்டதால் புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வர் கருணாநிதி, தனது சட்டசபை பணிகள் பொன்விழாவில் அறிவித்தார். அதன்படி, ரூ.450 கோடி செலவில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக வளாகம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த வளாகத்தை பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 13&ம் தேதி திறந்து வைத்தார். முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர்.

பழைய சட்டசபையின் கடைசி கூட்டத் தொடர், கடந்த ஜனவரி 6&ம் தேதி தொடங்கியது. அன்று அவையில் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றினார். 11&ம் தேதி கூட்டம் முடிவடைந்தது. அப்போது 2010&11ம் ஆண்டுக்கான பட்ஜெட் புதிய சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, புதிய சட்டசபை அரங்கில் முதல் கூட்டத் தொடர் நாளை மறுநாள் (19&ம் தேதி) தொடங்குகிறது. அன்று காலை 9.30 மணிக்கு தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்கிறார். இதில் புதிய அறிவிப்புகள், திட்டங்கள், வரிச் சலுகைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு (ஊனமுற்றோர்) தனி இலாகாவை ஏற்படுத்தி அவர்களின் நலனுக்கு அரசு பாடுபடும் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்துள்ளார். அவர்களுக்காக தனி இலாகா உருவாக்குவது குறித்த அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம் பெறும் என தெரிகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய விற்பனை மையங்கள் உருவாக்குவது, ஆண்கள் சுயஉதவிக் குழுக்களை அதிக அளவில் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்குவது, அரசுப் பணிகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் அறிவிக்கப்படலாம். பட்ஜெட் தொடர்பாக வணிகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினருடன் நிதி அமைச்சர் அன்பழகன் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளார். அவர்களது கோரிக்கைகள் குறித்தும் பட்ஜெட்டில் அறிவிப்பு வரலாம்.

பட்ஜெட் மீதான விவாதம் முடிந்த பிறகு, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சட்டமாக்க, பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதன்படி, முதல் தீர்மானத்தை தமிழகம் நிறைவேற்றும் என அமைச்சர் அன்பழகன் அறிவித்திருந்தார். அந்தத் தீர்மானமும் இந்தக் கூட்டத் தொடரில் இடம் பெறும் என தெரிகிறது.

பட்ஜெட் கூட்டத் தொடருக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. பழைய சட்டசபையில் இருந்ததுபோன்ற அதே வடிவில் இங்கும் சபாநாயகர் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர், அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கான இருக்கைகளும் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இருக்கை அமைப்பு உள்ளிட்ட பணிகளை முதல்வர் கருணாநிதி தினமும் பார்வையிட்டு, சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதை சட்டசபை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துணைக் கமிஷனர் தலைமையில் நூறு போலீசார் சபைக்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களைத் தவிர, சட்டசபை வளாகத்திலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகின்றனர். முதல்வர், அமைச்சர்கள் செல்ல தனி வழியும், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் செல்ல தனித்தனி வழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் கோட்டையில் இன்று ஆலோசனை நடத்தினர்.

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.