நீதிபதியின் கையெழுத்தை போட்ட வழக்கறிஞர் கைது

posted in: தமிழ்நாடு | 0

கோவையில் சிறுநீரக தான பிரமாண பத்திரத்தில் நீதிபதியின் கையெழுத்தை போட்டு மோசடி செய்த நோட்டரி வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கோவை அருகே வட வள்ளி அம்மன்குளத்தை சேர்ந்தவர் குமார் மகன் ரவி(38). டாஸ்மாக் மதுபான கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு கோவையில் பிஎஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன் இவரை பரிசோதித்த மருத்துவர்கள், இரண்டு சிறுநீரகங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர்.

ஒரு சிறுநீரகத்தை ரவி யின் மனைவி விஜயலட்சுமி கொடுக்க சம்மதித்தார். இதையடுத்து சிறுநீரக தானம் வழங்குவதற்கு முறைப்படி கோவை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் தலை மையில் இயங்கும் கண்காணிப்பு குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சிறுநீரகம் தானம் கொடுப்பதற்கு அரசு வகுத்துள்ள விதிமுறைகளின் படி, தானம் செய்யும் நபர் நோட்டரி முன்னிலையில் ஒப்புதல் அளித்து மாஜிஸ்திரேட் தகுதியிலான நீதிபதி மூலம் பரிந்துரை செய்யப்படவேண்டும்.

இதற்காக ரவி, வடவள்ளி அருகே வேளாண் பல்கலைக்கழக குடியிருப்பில் வசித்து வரும் முன்னாள் அரசு வழக்கறிஞர் சரோஜாவை அணுகியுள்ளார். தனக்கு தெரிந்த மற்றொரு நோட்டரி வழக்கறிஞர் தங்கவேல் மூலம் மாஜிஸ்திரேட் பரிந்துரை பெற்று வழங்கமுடியும். ஆனால் இதற்கு பணம் செலவாகும் என அவர் கூறியுள்ளார். பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சரோஜா மூலம் நோட்டரி வழக்கறிஞர் தங்கவேலுவுக்கு இரண்டு தவணைகளாக ரூ.23ஆயிரம் தரப்பட்டுள்ளது.

இப்பணத்தை பெற்றுக்கொண்டு தங்கவேலு தயாரித்து கொடுத்த பிரமாண பத்திரத்தை சிறுநீரக தான கண்காணிப்பு குழுவிடம் மருத்துவர்கள் மூலமாக ரவி வழங்கியுள்ளார். பிரமாண பத்திரத்தில் உடுமலை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிபதி சுஜாதாவின் பரிந்துரை கையெழுத்து இருந்தது.

சிறுநீரக தான விண்ணப்பத்தை ஆய்வு செய்த கோவை மருத்துவ கல்லூரி முதல்வர் குமரன் தலைமையிலான குழுவினர் நீதிபதியின் கையெழுத்து குறித்து சந்தேகமடைந்துள்ளனர். இதையடுத்து கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மூலம் உடுமலை நீதிபதி சுஜாதாவிடம் விசாரித்துள்ளனர்.

இதில் சுஜாதா அந்த பத்திரத்தில் கையெழுத்திடவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரவிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் பரிந்துரையும் ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்ட ரவி, மேற்கு மண்டல ஐ.ஜி சிவனாண்டியிடம் புகார் கொடுத்தார். பேரூர் டிஎஸ்பி முத்தரசு நேரடியாக விசாரணை நடத்தினார். இதில் நீதிபதி சுஜாதாவின் கையெழுத்தை போலியாக போட்டும், நீதிபதியின் முத்திரையை போலியாக தயாரித்து பிரமாண பத்திரத்தில் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

சிறுநீரக தான பிரமாண பத்திரத்தில் போலியாக மாஜிஸ்திரேட் கையெழுத்து போட்டது தொடர்பாக நோட்டரி வக்கீல் தங்கவேலுவை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.

அவர் நேற்று காலை கோவையில் நீதிபதி கோபிநாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். தினமும் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கைªழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் அவரை ஜாமீனில் விட நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிபதியின் கையெழுத் தை வழக்கறிஞரே மோசடி செய்து பயன்படுத்தியது நீதிமன்ற வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.