குற்றத்தை ஒப்புக் கொள்கிறார் ஹெட்லி – நாளை கோர்ட்டில் வாக்குமூலம்

சிகோகா: மும்பை [^] தாக்குதலில் தொடர்புடைய, லஷ்கர் இ தொய்பாவின் ஏஜென்ட்டான, பாகிஸ்தானிய அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லி, தனது குற்றங்களை ஒப்புக் கொள்ள முடிவு செய்து நாளை சிகாகோ கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.

ஹெட்லி கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்களாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை தாக்குதல் [^] சம்பவத்தில் ஹெட்லிக்குத் தொடர்பு உள்ளது. மும்பையில் தாக்குதல் நடப்பதற்கு முன்பு மும்பை, கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஹெட்லி சென்று வீடியோ படம் எடுத்தார், உளவு பார்த்தார், பல்வேறு தகவல்களை லஷ்கர் இ தொய்பாவுக்குக் கொடுத்தார் என்று எப்பிஐ கூறியுள்ளது.

இருப்பினும் ஹெட்லி குறித்த முழுமையான தகவல்களை இதுவரை இந்தியாவிடம் அது வழங்கவே இல்லை. மூடு மந்திரமாகவே, ஹெட்லியின் தீவிரவாத தொடர்புகளை அது வைத்துள்ளது.

மேலும், ஹெட்லியை விசாரிக்கக் கூட இந்தியாவை அது இதுவரை அனுமதிக்கவில்லை. ஹெட்லியை விசாரிப்பதற்காக இந்தியாவிலிருந்து சென்ற உளவுத்துறை குழுவினரையும் காக்க வைத்து கடுப்படித்து திருப்பி அனுப்பியது எப்பிஐ.

ஹெட்லியின் புகைப்படத்தைக் கூட அது நீண்ட நாட்களாக தராமல் இருந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்புதான் புகைப்படம் வெளியானது.

மேலும் ஹெட்லி ஒரு அமெரிக்க உளவாளி என்ற தகவலும் இந்தியாவை பெருமளவில் குழப்பியுள்ளது. அமெரிக்காவின் போதைத் தடுப்புப் பிரிவுக்காக இந்தியா, பாகிஸ்தானில் ஹெட்லி உளவு பார்த்தார் என்பதுதான் அந்தத் தகவல். எனவே மும்பை தாக்குதல் தொடர்பாக ஹெட்லியின் செயல்பாடுகள் அமெரிக்காவுக்கு முன்பே தெரிந்திருக்கக் கூடும் என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.

இந்த நிலையில்தான் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ள ஹெட்லி முடிவு செய்துள்ளாராம். நாளை சிகாகோ கோர்ட்டில் அவர் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.

இதுகுறித்து சிகாகோ கோர்ட் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், டேவிட் கோல்மேன் ஹெட்லியின் ‘கோரிக்கை மாற்றம்’ நாளை விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிபதி ஹேரி லினன்வெபர் முன்பு ஹெட்லி வாக்குமூலம் அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாக மார்ச் 23ம் தேதி ஹெட்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார். ஆனால் குற்றத்தை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளிக்க அவர் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து நாளைய அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

இதுகுறித்து ஹெட்லியின் வக்கீல் ஜான் தீஸஸ் கூறுகையில், ஆமாம், தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளப் போகிறார் ஹெட்லி என்றார் அவர்.

நாளை கோர்ட்டில் ஹெட்லி என்ன சொல்லப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.