மோசடி விசா – 15 மாதமாக சவூதியில் தவித்த 22 இந்திய என்ஜீனியர்கள்

ரியாத்: மோசடியான முறையில் போலி விசா மூலம் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டு, கடந்த 15 மாதங்களாக தவித்துக் கொண்டிருந்த 22 இந்திய என்ஜீனியர்களுக்கு விடிவு பிறந்துள்ளது. அவர்களில் ஒரு பிரிவினர் வியாழக்கிழமை சவூதியிலிருந்து தாயகம் கிளம்பிச் சென்றனர்.

ஒரு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட விசா ஆவணங்களைத் திருத்தி மோசடி செய்த சிலர் 50 விசாக்களைப் பெற்றனர். பின்னர் அதில் சிலவற்றை மும்பையைச் சேர்ந்த ஏபிடி என்ற ஆளெடுப்பு நிறுவனத்திற்கு விற்றுள்ளனர்.

இந்த விசாவின் மூலம் டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 22 என்ஜீனியர்கள் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரியாத் வந்து சேர்ந்தனர்.

தாங்கள் வேலைக்காக அனுப்பப்பட்ட நிறுவனத்தை அணுகியபோது அங்கு வேலை காலியாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர் 22 பேரும். அடுத்த அதிர்ச்சியாக அவர்களை ஏற்க முடியாது என்று கூறி விட்டது அந்த நிறுவனம்.

இதையடுத்து இந்தியத் தூதரகத்தை அவர்கள் அணுகி உதவி கோரினர். தூதரகமும், சவூதி தொழிலாளர் நலத்துறை, மோசடி விசாரணை ஆணையம், ரியாத் பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளிட்டவற்றைத் தொடர்பு கொண்டு இவர்களுக்கு நிவாரணம் தேடித் தர முயன்றது.

மோசடியாக தயாரிக்கப்பட்ட விசாக்கள் மூலம் இவர்கள் வந்துள்ளதால், இந்த விஷயத்தில் உதவ முடியாது என்று தொழிலாளர் நலத்துறை கூறி விட்டதாம்.

ஆனால் தாங்கள் இனி இங்கு எந்த வேலையிலும் சேர விரும்பவில்லை என்றும், ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தால் போதும் என்றும் 22 பேரும் கோரினர். ஆனால் தங்களது நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, போலியான விசாக்களை விநியோகித்தது யார் என்பதை கண்டுபிடிக்கும் வரை 22 பேரையும் அனுப்ப முடியாது என்று அவர்கள் வேலைக்கு சேர வந்த நிறுவனம் கூறி விட்டது.

இதனால் 22 பேரும் தாயகம் திரும்புவது பெரும் சிக்கலானது. இந்த நிலையில், இந்தியத் தூதரகத்தின் கோரிக்கையின் பேரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த விவகாரத்தில் தலையிட்டது இந்தியர்கள் நல மையம்.

இந்த அமைப்பின் பிரதிநிதிகள் ரியாத் ஆளுநரை நேரடியாக சந்தித்து பிரச்சினைக்கு உதவி கோரினர். அவரும் தலையிட்டதன் பேரில், 22 பேரும் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஒப்புதல் கிடைத்தது.

இதையடுத்து கடந்த வியாழக்கிழமை சிலர் தாயகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களும் விரைவில் இந்தியா திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks: thatstamil

Leave a Reply

Your email address will not be published.